அரக்கோணம் அருகே கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்துள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நெமிலி பகுதியில் கீழ்வீதி கிராமம் உள்ளது. இங்குப் பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் தை மாதத்தில் திரௌபதி அம்மன் மற்றும் மண்டியம்மன் கோயிலில் விழா நடைபெறும். காணும் பொங்கல் முடிந்து 6 அல்லது 8 ஆவது நாளில் நடைபெறும்.
மயிலார் என்ற பெயரில் நடைபெறும் திருவிழாவுக்கு வெளி ஊர்களில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள். நேற்று இரவு நடைபெற்ற விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் சிலர் நேர்த்திக்கடன் செய்யும் நோக்கில் அலகு குத்தி கொண்டனர்.
மேலும் சிலர் கிரேனில் தொங்கியபடி சாமிக்கு மாலை அணிவிக்க வந்தனர். அப்போது மேடு பள்ளமான இடத்தில் கிரேன் சென்றதில் எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் கீழவீதியைச் சேர்ந்த பூபாலன் (40), முத்துக்குமார் (39), ஜோதிபாபு(17) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் மேல் சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், சின்னசாமி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இதனால் பலி எண்ணிக்கை 4ஆக அதிகரித்தது.
தற்போது விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.
இவ்விபத்து குறித்து வேலூர் சரக டிஐஜி முத்துசாமி கூறுகையில், “இவ்விழாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாலை சரியில்லாத காரணத்தால் விபத்து நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்படும். இதுபோன்ற விழாக்களுக்கு மருத்துவர் ஆம்புலன்ஸ் ஆகிய ஏற்பாடுகள் செய்யப்படும்” என்றார். கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2022 ஏப்ரல் மாதம் தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடைபெற்ற தேர் திருவிழாவில் தேரின் மேல் பகுதி உயர் மின்னழுத்த கம்பியில் உரசி ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
இடைத்தேர்தல்: இன்று முதல் அதிமுகவில் விருப்ப மனு!
இளங்கோவன் வீட்டில் ஸ்டாலின்: மகனுக்கு பதிலாய் அப்பா வேட்பாளரான பின்னணி!