ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு: ஆதாரங்களை அடுக்கிய மத்திய அரசு!

தமிழகம்

“இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்ளது” என அதுதொடர்பான வழக்கில், மத்திய அரசின் ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் மோசடி செய்திருப்பதாகக் கூறி அவருக்கு எதிராக ஜி.எஸ்.டி ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது.

அதில், ஜி.எஸ்.டி. வரியாக ரூ. 6.79 கோடியும், அந்த தொகைக்கு அபராதமாக ரூ.6.79 கோடியும் செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஏ.ஆர்.ரகுமான் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

AR Rahman has evidence of GST evasion

அந்த மனுவில், “இசை படைப்புகளின் காப்புரிமையை, பட தயாரிப்பாளர்களுக்கு நிரந்தரமாக வழங்கிய பின், அதன் உரிமையாளர்கள் அவர்கள்தான். ஆகையால், தன்னிடம் வரி வசூலிப்பது சட்டவிரோதம்” என அதில் தெரிவித்திருந்தார்.

மேலும் அதில், “தன் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஜி.எஸ்.டி. ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

6 கோடியே 79 லட்சம் ரூபாய் வரி செலுத்தவில்லை எனக் குறிப்பிட்டிருப்பதுடன், அந்தத் தொகைக்கு மேற்கொண்டு 6 கோடியே 79 லட்சம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது” என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

AR Rahman has evidence of GST evasion

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், ஜி.எஸ் டி. நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் ஜிஎஸ்டி ஆணையர் தரப்பில் பதில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ”வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையிலேயே ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும், அவரது புகழை களங்கப்படுத்தும் நோக்கம் ஏதும் இல்லை.

ஜி.எஸ்.டி. புலனாய்வு பிரிவு சேகரித்த தகவலின் அடிப்படையிலேயே வரி விதிக்கப்பட்டதாகவும், அதை செலுத்தாததால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது” என பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “இதுதொடர்பாக தயாரிப்பாளர்களுடன் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள், விசாரணையின்போது அவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆராய்ந்தபோது இசை குறிப்புகளை மட்டும் ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கவில்லை என்பதும்,

அவர் இசையமைத்து, பாடலாசிரியர்கள், பாடகர்கள், கருவி கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்களின் சேவைகளை பயன்படுத்தி பதிவு செய்தார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

ஜி.எஸ்.டி. துறையிலேயே மேல்முறையீடு செய்து தீர்வை பெறாமல் தொடரப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும், வரி மற்றும் அபராத தொகைகளை வசூலிக்க விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க வேண்டும்” எனவும் அந்த பதில் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

”ஆர்.எஸ்.எஸ். அமைப்பையும் தடை செய்ய வேண்டும்”: காங்கிரஸ் எம்.பி

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்துக்கு எதிர்ப்பு – மனு விசாரணைக்கு உகந்ததல்ல: உயர் நீதிமன்றம்!

+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.