கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் நடந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை. திரண்ட ரசிகர்களுக்கு போதுமான உள்கட்டமைப்பு ஏற்பாடுகள் இல்லாமை, மிக அதிக அளவு டிக்கெட் விற்பனை உள்ளிட்ட காரணங்களால் அங்கே நெரிசல் ஏற்பட்டு உயிர் சேத அபாயம் நல்வாய்ப்பாக தவிர்க்கப்பட்டது. இதுகுறித்து மின்னம்பலத்தில், ‘ஏ.ஆர். ரகுமான் கன்சர்ட் செக்யூரிட்டிகள் நியமனத்தில் அலட்சியம், ஆடியோ ஆதாரம்’ என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதில், கடந்த ஆகஸ்டு 12 ஆம் தேதி இதே இடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு மழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கு குரூப் 4 என்ற செக்யூரிட்டி நிறுவனத்தை ஏற்பாடு செய்திருந்தனர். ரத்து செய்யப்பட்டதால் அப்போது அவர்களுக்கு பேசிய பணத்தில் பகுதியளவு கூட கொடுக்கப்படவில்லை. அதனால் இன்னொரு செக்யூரிட்டி நிறுவனத்தோடு பேசியிருக்கிறார்கள். அவர்கள் வாட்ஸ் அப் குரூப்களில் வாய்ஸ் மெசேஜ் கொடுத்து ரகுமானின் இசை நிகழ்ச்சிக்கு ஆளெடுத்தனர். முன்னனுபவம் இல்லாதவர்களை கூட செக்யூரிட்டி வேலைக்காக அன்று தேர்வு செய்திருக்கிறார்கள் என்று எவர் கிரீன் நிறுவனத்தின் வாய்ஸ் மெசேஜையும் வெளியிட்டிருந்தோம்.
நமது செய்திக்குப் பிறகு அந்த எவர் கிரீன் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நமது அலுவலகத்துக்கு வந்தனர். “நாங்கள் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சிக்காக செக்யூரிட்டி வேலைக்கு ஆள் எடுத்தது உண்மைதான். ஆனால் இறுதி ஒப்பந்தம் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஆனால் நாங்கள் ஆட்கள் எடுத்த தகவலை மட்டும் வைத்துக் கொண்டு எங்கள் நிறுவனம் செய்ததாக செய்தி போட்டிருக்கிறீர்கள். இந்த செய்தி எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது” என்று கவலை தெரிவித்தனர்.
அப்படியென்றால் ரகுமான் இசை நிகழ்ச்சிக்கான செக்யூரிட்டி ஒப்பந்தம் யாருக்குதான் கொடுக்கப்பட்டது என்று நாம் விசாரித்த போது… ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீஸ் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டிருந்ததாக தெரியவந்தது. இந்த நிறுவனம் குறித்து தாம்பரம் மாநகர காவல்துறையினரும் விசாரித்து வருகிறார்கள்.
இந்த விவகாரம் குறித்து ஸ்டால்வார்ட் பீப்பிள் சர்வீஸ் நிறுவனத்தை (தொடர்பு எண் – 044 42024175) தொடர்பு கொண்டு கேட்டோம்.பெண் ஊழியர் ஒருவர் போன் எடுத்தார். அவரிடம் மின்னம்பலத்தில் இருந்து பேசுகிறோம் என்று நம்மை அறிமுகம் செய்துகொண்டு ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் செக்யூரிட்டி குளறுபடிகள் பற்றி கேட்க வேண்டும் என்றோம். அப்போது அந்த பெண் ஊழியர், ‘லைனில் வெயிட்பண்ணுங்க’ என்றார்.
இன்டர்காமில் யாரிடமோ பேசிவிட்டு, ‘சார் இல்லை. என்ன விஷயம் சொல்லுங்கள் சொல்கிறேன்’ என்றவர், அங்கு யாரையோ அழைத்தார்.
‘ஜான்சன் சார் வாங்க மீடியாவிலிருந்து பேசுறாங்க. ஏஆர் ரகுமான் நிகழ்ச்சியில் நடந்தது பற்றி கேட்கறாங்க’ என்று போனைக் கொடுத்தார், அவரிடம் ஏ.ஆர் ரகுமான் நிகழ்ச்சியில் உங்கள் நிறுவனம்தானே செக்யூரிட்டி சர்வீஸ் செய்தது என்று கேட்டதும், ‘யார் சொன்னது நாங்கள் இல்லை’ என்று மறுத்தவர், ‘நிகழ்ச்சி நடத்திய ஏசிடிசியிடம் கேளுங்கள்’ என்று அவசரமாக லைனைத் துண்டித்தார். அன்று நடந்ததற்கு சட்ட ரீதியாக யார் பொறுப்பு என்பது போலீஸ் விசாரணையின் முடிவில் தெரியவரும்.
வணங்காமுடி
லோகேஷ் படம் எப்படி சார் இருக்கும்? – ரஜின் சொன்ன நச் பதில்!
சரியும் மேட்டூர் அணை நீர் இருப்பு: கேள்விக்குறியில் சம்பா, தாளடி சாகுபடி!