சென்னையில் செப்டம்பர் 10 ஆம் தேதி நடந்த இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின், ‘மறக்குமா நெஞ்சம்?’ இசை நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சைகள் இன்னும் ஓயவில்லை.
அளவுக்கு அதிகமான டிக்கெட் விற்பனை, கார் பார்க்கிங், கேலரிகள் ஒதுக்கீடுகள் ஆகியவற்றில் குளறுபடிகள் போன்ற காரணங்களால் நெரிசல் ஏற்பட்டு பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சியை டிக்கெட் எடுத்தும் பார்க்க முடியாமல் திரும்பினார்கள். அவர்களில் கணிசமானோர் சமூக தளங்களிலும் ஊடகங்களிலும் தங்களது கருத்துகளை அழுத்தமாக எடுத்து வைத்தார்கள்.
இது சர்ச்சையாகி நேற்று (செப்டம்பர் 12) தாம்பரம் மாநகர காவல்துறைக்கு உட்பட்ட பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு டெபுடி கமிஷனர் தீபா சத்யன் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். இதையடுத்து ஏ.ஆர். ரகுமான் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களான ஏசிடிசி நிறுவனம் ஆகியோர் செய்த தவறுக்கு ஒரு போலீஸ் அதிகாரி பலிகடா ஆக்கப்பட்டார் என்று போலீஸுக்குள்ளேயே சலசலப்பு எழுந்திருக்கிறது.
ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கோளாறுகள் என்ன, அவற்றுக்கு காரணம் என்ன என்று விசாரித்தோம். “செப்டம்பர் 10 ஆம் தேதி, சென்னை கிழக்குக் கடற்கரை சாலை பனையூரில் உள்ள ஆதித்யராம் டவுன்ஷிப் வளாகத்தில் ஏ. ஆர். ரகுமான் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அதிகளவில் கூட்டம் ஏற்பட்டு பிளாட்டினம் டிக்கெட் வாங்கியவர்களே நிம்மதியாக பார்க்க முடியாமல் தள்ளுமுள்ளுக்கு ஆளாகினார்கள்.
பிளாட்டினம் டிக்கெட் வாங்கியவர்களுக்கு விஐபி கேலரி ஒதுக்கப்பட்டு தடுப்புகளைப் போட்டிருந்தனர். அந்த கேலரியில் நீதிபதிகள் குடும்பத்தினர், நடிகை ஷாலினி அவரது தங்கை மற்றும் சின்னத்திரை நடிகைகள், தொழில் அதிபர் பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் அனைவரும் நிகழ்ச்சியை எக்கி எக்கியும் எழுந்தும்தான் பார்த்தனர்.
ஒரு கட்டத்தில் கூட்டம் நெரிசல் அதிகரித்து ஒருவருக்கொருவர் மோதித் தள்ளி உயிர் தப்பினால் போதும் என்று வெளியேறினார்கள். இன்னொரு பக்கம் ஈசிஆர் சாலை ஸ்தம்பித்து முதல்வர் கான்வாய் 14 நிமிடங்கள் தடைப்பட்டு போனது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி நடக்கவிருந்த இதே நிகழ்ச்சி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது. அப்போது டிக்கெட்களை விற்பனை செய்து கோடிகளை அள்ளிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், வாங்கிய கட்டணத்தை திரும்பத்தரவில்லை. ஸ்டேஜ், இருக்கைகள், சவுண்ட் சர்வீஸ் போன்ற ஏற்பாட்டாளர்களுக்கும் பேசியபடி தொகையை கொடுக்கவில்லை.
அந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டபோது உள் பாதுகாப்புக்கு குரூப் 4 செக்யூரிட்டி சர்வீஸ் என்ற நிறுவனத்தைதான் ஒப்பந்தம் செய்திருந்தார்கள். ஆகஸ்டு 12 நிகழ்ச்சி நிறுத்தப்பட்டதால் அவர்களுக்கான தொகையையும் முழுமையாக கொடுக்கவில்லை. அதனால் செப்டம்பர் 10 ஆம் தேதி நிகழ்ச்சிக்கு செக்யூரிட்டி சர்வீஸ் செய்ய மறுத்து விட்டனர் குரூப் 4 செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தினர். இந்த காரணத்தால் எவர்கிரீன் என்ற வேறு ஒரு செக்யூரிட்டி சர்வீஸை அவசரமாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள் ஏசிடிசி நிறுவனத்தினர். புதிய செக்யூரிட்டி நிறுவனத்தினரால் கூட்டத்தை சரியாக கையாள முடியவில்லை. இது ஒரு முக்கியமான காரணம்.
ஏனென்றால் எவர்க்ரீன் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தாரால் இந்த நிகழ்ச்சிக்கு தேவையான போதிய செக்யூரிட்டி ஆட்களை கூட ஏற்பாடு செய்யமுடியவில்லை. அந்த நிறுவனத்தின் சார்பில் மேன் பவர் வாட்ஸ் அப் குரூப் ஒன்றில் செப்டம்பர் 6 ஆம் தேதிக்கு முன்பே ஒரு வாய்ஸ் மெசேஜ் போடுகிறார்கள்.
‘செப்டம்பர் 10 ஆம் தேதி சென்னை பனையூரில் ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ‘க்ரவுட் கன்ட்ரோல்’ செய்வதற்கான செக்யூரிட்டிகள் வேண்டும். 300 செக்யூரிட்டி கார்டுகள் தேவைப்படுகிறார்கள். இந்த க்ரூப்பில் இருக்கிறவர்கள் எல்லாருமே அன்று ஒரு நாள் மட்டும் வந்தால் போதும். யூனிஃபார்ம் எதுவும் வேண்டாம். வொயிட் ஷர்ட், பிளாக் பேன்ட், ஷூ இருந்தா போதும். ஸ்பாட்டிலேயே சம்பளம் கொடுத்துவிடுவோம். போக்குவரத்து செலவுக்கும் பணம் கொடுப்போம். நீங்க ஃபங்ஷனையும் பார்க்கலாம், இன்கம் வந்த மாதிரியும் இருக்கும். நீங்க செக்யுரிட்டி லைனில் இல்லை என்றாலும் பரவாயில்லை’ என்று அந்த வாய்ஸ் மெசேஜ் சொல்கிறது.
இதைப் பார்த்துவிட்டு அந்த நம்பருக்கு போன் செய்த ஒரு வாலிபர், ‘சார் நான் புரசைவாக்கத்துல இருக்கேன்’ என்று கூறுகிறார். செக்யூரிட்டி வேலையில் இதற்கு முன்பு இருந்ததில்லை என்றும் கூறுகிறார். அவருக்கு 8 மணி நேரத்துக்கு சம்பளம் 750 ரூபாய் என்றும் அவரை 6 ஆம் தேதி வரச் சொல்கிறார் அந்த நிறுவன அதிகாரி.
இந்த இரு ஆடியோக்களுமே, ஏ.ஆர். ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் கூட்டத்தை ஒழுங்குபடுத்த எப்படிப்பட்ட ஆட்களை எடுத்திருக்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
இன்னொன்று ஆகஸ்ட் 12 ஆம் தேதி நிகழ்ச்சிக்கு டிக்கெட் வாங்கியவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தராமலேயே… செப்டம்பர் 10 ஆம் தேதி நிகழ்ச்சிக்கும் அதிகளவில் டிக்கெட் விற்பனை செய்தார்கள். அதிகபட்சம் 25 ஆயிரம் பேர் அமரக்கூடிய அந்த கிரவுண்டில் சுமார் 40 ஆயிரம் பேர் புகுந்து விட்டனர். வாகனங்களும் அதிகரித்து விட்டது” என்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகள் பற்றி அறிந்தவர்கள்.
வழக்கமாகவே இசிஆர் வார இறுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசலோடுதான் இருக்கும். அதே நேரத்தில் ஏ. ஆர். ரகுமான் நிகழ்ச்சிக்கு வந்தவர்களும் எதிரெதிராக வந்ததும் இசிஆர் ஸ்தம்பித்து போனது.
இதைப்பற்றி தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டோம் “இது முழுக்க முழுக்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் குளறுபடி. காவல் துறையினர் போதுமான அளவுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். புதுச்சேரியிலிருந்து சென்னை மார்க்கமாக வந்த அதிகப்படியான வாகனங்கள், சென்னையிலிருந்து நிகழ்ச்சிக்கு வந்த ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஆகியவற்றால் ஸ்தம்பித்து போன சாலையை உடனே க்ளியர் செய்து போக்குவரத்தை சரி செய்தோம். இருந்தாலும் இந்த சம்பவத்தை பற்றி விசாரித்து வருகிறோம்” என்றார்.
-வணங்காமுடி