ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரியை ஒருங்கிணைப்பு செய்த ஏசிடிசி நிறுவனர் ஹேமந்த் உள்பட மூன்று பேர் மீது தாம்பரம் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
செப்டம்பர் 10-ஆம் தேதி சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஆதித்யராம் அரண்மனை மைதானத்தில் ஏ.ஆர்.ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசைக்கச்சேரி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்களுக்கு சரியான இருக்கைகள் அமைக்காதது, கழிப்பறை, பார்க்கிங் நெருக்கடி உள்ளிட்ட குளறுபடிகளால் பொதுமக்கள் திண்டாடினர்.
டிக்கெட்டுகள் வைத்திருந்தும் அதிகப்படியான கூட்டத்தால் பார்வையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியால் கிழக்கு கடற்கரை சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
முதல்வரின் கான்வாய் வாகனம் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தவறிய பள்ளிக்கரணை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் தீபா சத்யன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
ஏ.ஆர்.ரகுமான் இசைக்கச்சேரியில் நடைபெற்ற குளறுபடிகள் குறித்து விசாரிக்க டிஜிபி சங்கர் ஜிவால் தாம்பரம் காவல் ஆணையர் அமல் ராஜூக்கு உத்தரவிட்டார்.
டிஜிபி உத்தரவின் பேரில் சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு அடுத்த நாளே சென்று தாம்பரம் காவல் ஆணையர் விசாரணை நடத்தினார்.
ஏசிடிசி நிறுவனத்திடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்தநிலையில் தாம்பரம் காவல் சரகத்திற்குட்பட்ட கானத்தூர் காவல் நிலையத்தில் ஏசிடிசி நிறுவனர் ஹேமந்த் குமார் உள்பட மூன்று பேர் மீது இந்திய தண்டனை சட்டம் 406 (குற்றவியல் சட்டத்தை மீறுதல்) 188 (பொது ஊழியரால் முறையாக அறிவிக்கப்பட்ட உத்தரவை மீறுதல்) உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இதுகுறித்து தி இந்து ஆங்கில நாளிதழுக்கு தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் அளித்த பேட்டியில்,
“எங்களது விசாரணையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. பலர் போலி டிக்கெட்டுகளை பயன்படுத்தி நிகழ்ச்சிக்கு வந்துள்ளனர். இது கூட்ட நெரிசலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம். நிகழ்ச்சி நடத்த விதிக்கப்பட்ட நிபந்தனைகளை விழா ஏற்பாட்டாளர்கள் மீறியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் இன்று ஆலோசனை!