சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதியுடன் உடன் பணி ஓய்வு பெற்றார். இந்நிலையில் பொறுப்பு நீதிபதியாக எம்.துரைசாமியை நியமிக்கலாம் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குடியரசுத் தலைவருக்கு பரிந்துரை செய்தனர்.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி எம். துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டார். அதன்படி செப்டம்பர் 13 நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
தலைமை நீதிபதியின் நீதிமன்ற அறையில் நீதிபதி சுந்தர்மோகனுடன் இணைந்து பொதுநல வழக்குகள் உள்ளிட்ட தலைமை நீதிபதி விசாரிக்கும் வழக்குகளை விசாரித்து வந்தார்.
முந்தைய தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, இடமாற்றம் செய்யப்பட்ட போது பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவி வகித்த நீதிபதி துரைசாமி இரண்டாவது முறையாக பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுக் கொண்டார். வரும் 21 ஆம் தேதியுடன் அவர் பணி ஓய்வு பெறுகிறார்.
இதையடுத்து உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதியாக இருப்பவர். வரும் 22 ஆம் தேதியில் இருந்து தலைமை நீதிபதி பொறுப்பை டி.ராஜா ஏற்க உள்ளார்.
கலை.ரா
செப்டம்பர் 18: எழுபத்து மூன்று ஆண்டுகளுக்கு முந்தைய எழுச்சிமிகு மாலை!