அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில விண்ணப்பிக்க தவறியவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க இன்று (ஜூலை 3) முதல் 3 நாட்களுக்கு அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்புகளுக்கு மொத்தம் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் 2024- 25ம் கல்வியாண்டின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் மே 5ம் தேதி தொடங்கியது. அதன்படி அரசு கல்லூரிகளில் சேர்வதற்கு சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
தொடர்ந்து ஒவ்வொரு கல்லூரிக்கும் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டு, கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட்டது. மேலும் முதல் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 10 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரையிலும், 2ம் சுற்றுக் கலந்தாய்வு ஜூன் 24 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது.
எனினும் தமிழகத்தில் உள்ள 164 அரசு கலை கல்லூரிகளில் 2ஆம் சுற்று கலந்தாய்வு முடிவில் 63 சதவீத மாணவர் சேர்க்கையே நடைபெற்றிருந்தது.
இதனையடுத்து இன்னும் காலியாக உள்ள இடங்களை நிரப்பும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயில மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று முதல் ஐந்தாம் தேதி வரை https://www.tngasa.in/ இணையதளத்தில் மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.
புதிதாக விண்ணப்பிக்கும் மாணவர்கள் https://www.tngasa.in/user/register என்ற இணைப்பை க்ளிக் செய்து, முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம்.
இதற்கிடையே கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ’ஜூலை 8 ஆம் தேதி முதல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும். ஒரு பாடப்பிரிவில் சேர்ந்த மாணவர்கள் வேறொரு பாடப்பிரிவில் மாற விரும்பினால் அந்த துறையில் காலியிடம் இருப்பின் அவர்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே விண்ணப்பித்து சேர்க்கை பெற்று துறையில் இணையாத மாணவர்களின் இடங்களையும் நிரப்ப வேண்டும்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பத்திற்கான தகவல்களைப் பதிவு செய்தல் குறித்த வழிமுறைகளை முழுமையாக அறிய https://static.tneaonline.org/docs/arts/tamil_instruction.pdf?t=1684734156651 என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
2வது கட்ட கல்வி விருது விழா… மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பாரா விஜய்?