கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றியதை எதிர்த்து மேல்முறையீடு?: அமைச்சர் ரகுபதி பேட்டி!

தமிழகம்

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது தொடர்பாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த ஜூன் மாதம் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று(நவம்பர் 20) உத்தரவிட்டது.

இது தொடர்பாக புதுக்கோட்டையில்  செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றியது ஆச்சரியமளிக்கிறது. ஆனால் நீதிபதிகளின் உத்தரவை விமர்சிக்க நமக்கு உரிமை கிடையாது.

இதுவரை எந்த அரசும் எடுக்காத அளவுக்கு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சிபிஐ என்பது சிபிசிஐடி போன்று பல்வேறு மாநிலங்களில் இருக்கக்கூடிய போலீஸ் அதிகாரிகளைக் கொண்ட ஒரு விசாரணை அமைப்பு தான். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது.

மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே ஒரு நிர்வாக சீர்குலைவை உருவாக்கும் வகையில் இதுபோன்ற தீர்ப்புகள் அமைந்து விடுகின்றன.

தமிழ்நாடு போலீசார் ஸ்காட்லாந்து போலீசாருக்கு இணையானவர்கள் என்று போற்றும் அளவுக்கு திறமை வாய்ந்தவர்கள்.

கள்ளக்குறிச்சி வழக்கை அவர்கள் சிறப்பாக கையாண்டு வந்தனர். உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு எங்களை ஆலோசிக்க செய்திருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆலோசித்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது தொடர்பாக நல்ல முடிவை எடுப்பார் ” என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “இனி சிபிஐ விசாரிக்க ஆரம்பித்தால் காலதாமதம் தான் ஆகுமே தவிர துரிதமான பலன் கிடைக்காது என்பது எங்களுடைய முடிவு” என்று கூறினார்.

காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெற்றது தவறு என்று நீதிபதிகள் கூறியுள்ளனரே என்ற கேள்விக்கு, “ஒருவரை காலம் காலமாக தண்டனையிலேயே வைத்திருக்க முடியாது. ஆறு மாத காலத்துக்கு அவர்களை தண்டனையில் வைத்திருக்கலாம். அதை தவிர்த்து, தண்டனையிலேயே வைத்திருக்க வேண்டும் என்றால் அவர்களை வேலையை விட்டு தான் நீக்க வேண்டும். அப்படியானால் விசாரணை நடத்தி தான் நீக்க வேண்டுமே தவிர, எடுத்த எடுப்பிலேயே நீக்கிவிட்டால், இதே நீதிமன்றம் வேலையை விட்டு நீக்கியது தவறு என்று சொல்லக்கூடிய வாய்ப்பும் உண்டு” என்று பதிலளித்தார்.

இந்த தீர்ப்பு 2026 இல் திமுகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது என்று தெரிவித்த அமைச்சர்  ரகுபதி, கள்ளக்குறிச்சி பகுதி மக்கள் இந்த அரசு உரிய நடவடிக்கையை எடுத்து இருக்கிறது என்பதில் திருப்தியாக இருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகத்தான் இந்த வழக்குகளை சில அரசியல் கட்சிகள் தொடர்ந்து இருக்கிறார்கள்” என்று குறிப்பிட்டார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஏ.ஆர்.ரஹ்மான் – சாயிரா பானு விவாகரத்து: அவரைப்பற்றி இவரும் இவரைப்பற்றி அவரும்… கண் பட்ட கதை!

“சட்டமன்றத் தேர்தலுக்கு தயாராவோம்” – திமுக உயர்நிலை கூட்டத்தில் தீர்மானம்!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0