25 கோடி பஞ்சாயத்து…  ஐபிஎஸ் Vs ஐஏஎஸ்

தமிழகம்

ஒரு நில பரிவர்த்தனை விவகாரத்தில் மாவட்ட எஸ்.பி.யையே ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி எச்சரிக்கும் விதத்தில் பேசியதாக ஒரு தகவல் கிருஷ்ணகிரி வட்டார அதிகாரிகளிடையே பரபரப்பான விவாதமாகியிருக்கிறது.

என்ன நடந்தது என கிருஷ்ணகிரி  மாவட்ட அரசு அதிகாரிகள் வட்டாரத்தில் விசாரித்தோம்.

“கிருஷ்ணகிரி டவுன் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ், கணேஷ் ஆகியோர் நகைக் கடை வைத்திருக்கிறார்கள். இவர்கள் ரியல் எஸ்டேட்  பிசினசிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், இவர்களது உறவு முறையிலான  (ஒரே சமுதாயம்)   ராஜேந்திர சுந்தர், விஜயன் ஆகியோரும் ரியல் எஸ்டேட் தொடர்பான பணிகளை தான் செய்து வந்தனர். இவர்களும் கிருஷ்ணகிரி டவுன் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான்.

இவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்தான் ஐ.பி.எஸ். – ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இடையிலான மோதலாக விஸ்வரூபமெடுத்துள்ளது” என்கிறார்கள்.

ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த  இரு தரப்பினரிடையே ஏற்பட்ட பிணக்கு ஐ.பி.எஸ். – ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு இடையிலான மோதலாக மாறியது எப்படி?

சம்பந்தப்பட்ட இரு தரப்பினர் உள்ளிட்டவர்களிடம் விசாரித்தோம்.

“காவேரிப்பட்டினம் அருகே இருக்கும் நிலத்தை வாங்கித் தருவதாக சொல்லி  வெங்கடேஷ், கணேஷ் ஆகியோரிடம் இருந்து சில தவணைகளில் 25 கோடி ரூபாய் பணம் பெற்றிருக்கிறார்கள் ராஜேந்திர சுந்தரும், விஜயனும்.

அந்த இடம் தங்களது உறவினருக்கு சொந்தமானது என்றும் அதில் நல்ல லாபம் கிடைக்கும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இதை நம்பி வெங்கடேஷ், கணேஷ் ஆகியோரும் பணம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால்  ஒரு வருடமாகியும் அவர்கள் நிலத்தையும் ரிஜிஸ்டர் செய்து கொடுக்கவில்லை, பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லை.

இருவரும் ஒரே சமுதாயத்தினர் என்பதால் சமூக பெரியவர்களிடம் சொல்லி பஞ்சாயத்தும் நடந்திருக்கிறது. ஆனபோதும் பிரச்சினை தீரவில்லை. இதனால், போலீஸுக்கு போவது என்று முடிவெடுத்தனர்  வெங்கடேஷும் கணேஷும்.

கிருஷ்ணகிரி எஸ்.பி. அலுவலகத்தில் சில மாதங்களுக்கு முன்பு தங்களை 25 கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக ராஜேந்திர சுந்தர், விஜயன் ஆகியோர் மீது புகார் கொடுத்தனர்.

கடந்த ஒரு வருடமாக எந்தெந்த வகைகளில் எத்தனை லட்சம் பணம் கொடுத்தோம் என்கிற ஆதாரங்களுடன் எஸ்.பியிடம் அவர்கள் புகார் அளித்தனர்.

புகாரை பரிசீலித்த கிருஷ்ணகிரி எஸ்.பி. தங்கதுரை, இதை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாருக்கு ஃபார்வர்டு செய்தார்.  மாவட்ட குற்றப் பிரிவு டி.எஸ்.பி. ராஜா தங்கத்திடம்  பொறுப்பை ஒப்படைத்தார். இதையடுத்து  குற்றம் சாட்டப்பட்ட ராஜேந்திர சுந்தரையும், விஜயனையும் விசாரணைக்காக அழைத்தார் டி.எஸ்.பி.

விசாரணைக்கு வந்த இருவரும், ’சார்  நாங்க சொந்தக்காரவுங்க. எங்களுக்குள்ள நடக்குற கொடுக்கல் வாங்கல் பிரச்சினையை பேசித் தீர்த்துக்குறோம். இந்த சிவில் மேட்டர்ல போலீஸ் தலையிட வேணாம், நாங்களே பேசிக்குறோம் சார்… இது ஃபேமிலி இஷ்யு.  இதுல எஃப்.ஐ.ஆர். எதுவும் போடாதீங்க. எங்களுக்கு சென்னையில தலைமைச் செயலகத்துல அக்ரி டிபார்ட்மெண்ட் செகரட்டரியா இருக்குற அபூர்வா ஐ.ஏ.எஸ்.சை நல்லா தெரியும். நாங்க அவங்ககிட்டயே பேசியிருக்கோம். அதனால  போலீஸ் இதுல தலையிட வேணாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், புகார் தாரர்களான வெங்கடேஷ் மற்றும் கணேஷ், ‘இனியும் பேசி ஒன்றுமில்லை. 25 கோடி ரூபாயை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டார்கள். எங்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் சட்டப்படி நடவடிக்கை எடுங்கள்’ என்று வலியுறுத்தினார்கள்

இந்நிலையில் எஸ்.பி.யும் இந்த விவகாரத்தில் ஆவணங்களை ஆய்வு செய்துகொண்டிருந்த சூழலில்தான்… மாவட்ட எஸ்.பி. தங்கதுரைக்கு வேளாண் துறை செயலாளர் அபூர்வாவே போன் செய்திருக்கிறார்.

‘அவங்க ரெண்டு சைடுமே ஒரே கம்யூனிட்டி. அவங்களுக்குள்ள பேசித் தீர்த்துக்குறதா சொல்றாங்க. அப்புறம் ஏன் அதை போய் விசாரிக்கிறீங்க?’ என்று கேட்க, எஸ்.பி. அதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார். அப்போது அபூர்வா ஐ.ஏ.எஸ். கோபப்பட்டு, கிருஷ்ணகிரி எஸ்.பி.யை ஒருமையில் திட்டிவிட்டு போனை வைத்துவிட்டார். அதுமட்டுமல்ல… சென்னையில் இருந்து சில உயர் போலீஸ் அதிகாரிகள் மூலமாகவும் இவ்விவகாரத்தை விசாரிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்திருக்கிறார் அபூர்வா ஐ.ஏ.எஸ்.

இதனால்  அதிருப்தி அடைந்த எஸ்.பி. தனது மேலதிகாரிகள் கவனத்துக்கு இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றிருக்கிறார். அப்போது மேலதிகாரிகள், ‘எவிடென்ஸ்  சரியா இருந்தா தொடர்ந்து விசாரிங்க’ என்று அவருக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் புகாரில் உண்மைத் தன்மை இருந்ததால் ஓரிரு மாதங்களுக்கு முன் இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்தார் எஸ்.பி.

எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதையடுத்து கைது நடவடிக்கைதான் என்ற நிலையில்,  குற்றம் சாட்டப்பட்டவர்கள், முன் ஜாமீன் முயற்சியில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்ல,  அபூர்வா ஐ.ஏ.எஸ்.சுக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மீண்டும் கிருஷ்ணகிரி எஸ்.பி.க்கு போன் போட்ட வேளாண் துறை செயலாளர்  அபூர்வா ஐ.ஏ..எஸ். ‘நான் சொன்னதையும் மீறி எஃப்.ஐ.ஆர். போட்டுட்டியா?’ என்று  மீண்டும் ஒருமையில் பேசி எச்சரித்திருக்கிறார்.

இந்தத் தகவல்தான் இப்போது கிருஷ்ணகிரி காவல்துறை அதிகாரிகளிடையே பெரும் விவாதமாக மாறியிருக்கிறது.  பண மோசடிப் புகாரில் ஆதாரங்கள் இருந்தும் நடவடிக்கை எடுப்பதைத் தடுக்க ஐ.ஏ.எஸ். அதிகாரியே முயற்சிப்பதா, மோசடிக்காரர்களை பாதுகாப்பதா  என்று போலீஸாருக்குள் தொடர் விவாதங்கள் கிருஷ்ணகிரியில் நடந்து வருகின்றன” என்று முடித்தனர்.

-வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“கலைஞரால் பட்டைத் தீட்டப்பட்டவர் பொன்முடி” – புத்தக வெளியீட்டு விழாவில் ஸ்டாலின் புகழாரம்!

வடக்கே அஞ்சலை அம்மாள்… தெற்கே வேலுநாச்சியார்: விஜய் முன்னிறுத்தும் சிங்கப் பெண்கள்!

+1
0
+1
0
+1
0
+1
5
+1
1
+1
1
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *