ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது என்று மக்களவையில் திமுக எம்.பி. எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் இன்று (மார்ச் 21) பதில் அளித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு அனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 8ம் தேதி இரண்டாவது முறையாக திருப்பி அனுப்பினார்.
அதற்கு காரணமாக ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற மக்களவை கூட்டத் தொடரில் திமுக எம்பி. எஸ்.ஆர்.பார்த்திபன், ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
மாநில அரசுகளுக்கு அதிகாரம்
அதற்கு மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில், “சூதாட்டங்களை தங்களது வரம்பிற்கு கொண்டு வருவதற்கு தேவையான சட்டங்கள் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கு மாநில அரசுகளுக்கே அதிகாரம் உள்ளது. சில மாநில அரசுகள் ஏற்கெனவே ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன.
பந்தயம், சூதாட்டம் இரண்டயும் 7வது அட்டவணை 34வது பிரிவில் உள்ள அம்சங்கள் மூலம் ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டங்களை இயற்ற முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரமில்லை என்று ஆர்.என். ரவி கூறியிருந்த நிலையில், தற்போது அதற்கு எதிர்கருத்தை மத்திய அமைச்சர் தெரிவித்து உள்ளார். இது ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் அனுப்பவுள்ள தமிழ்நாடு அரசுக்கு சாதகமான பதிலாகவே பார்க்கப்படுகிறது.
கிறிஸ்டோபர் ஜெமா
ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி வீட்டில் திடீர் ரெய்டு!
சென்னை மெட்ரோ கொடுத்த ஒருநாள் ஆஃபர்!