இன்று (ஏப்ரல் 15) முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது. இதனால் மீன்கள் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மன்னார் வளைகுடா கடலில் தற்போது மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாகும். இந்த காலகட்டத்தில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் சென்று மீன் பிடித்தால், மீன் வளம் குறைந்து விடும்.
இதைக் கருத்தில் கொண்டு, ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்களுக்கு, கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப் பகுதியில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று (ஏப்ரல் 15) முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வருகிறது.
ஆண்டுதோறும் இந்த தடைக்காலத்தில் விசைப்படகுகள் மூலம் மீன் பிடிப்பதை நிறுத்திவிடுவர். இவை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, படகு, வலைகள் சீரமைக்கும் பணிகளை மீனவர்கள் மேற்கொள்வர். மாவட்டத்தில் உள்ள கடலோர கிராமங்களில் இருந்து குறுகிய தூரம் செல்லக்கூடிய வகையில் ஃபைபர் படகு மூலம் தினமும் மீன்பிடித்தலில் மீனவர்கள் ஈடுபடுவர்.
ஏற்றுமதி தரத்தினாலான மீன்கள் இக்காலக்கட்டத்தில் வராது. சிறிய வகை மீன்களே சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும். போதிய அளவில் மீன் வரத்தின்மையில், மீன், இறால், நண்டு உள்ளிட்டவைகளின் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மீன்பிடி தடைகாலம் தொடங்கும் நிலையில் விடுமுறை நாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை, காசிமேட்டில் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற அனைத்து விசைப்படகுகளும் கரைக்குத் திரும்பின.
நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் மீன்கள் வாங்க மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. இதன் காரணமாக மீன்விலை சற்று குறைவாகவே விற்கப்பட்டது.
கடந்த வாரத்தில் ரூ.1,300 வரை விற்கப்பட்ட வஞ்சிரம் நேற்று ரூ.800-க்கு விற்கப்பட்டது. எப்போதும் விற்கப்படும் விலையை விட குறைத்து விற்கப்பட்டும் அதனை வாங்க ஆட்கள் இல்லை.
இதனால் வார இறுதி நாட்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் காசிமேடு மார்க்கெட் நேற்று வழக்கமான உற்சாகம் இன்றி காணப்பட்டது.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: கோடைக்கு உதவும் கூல் பானங்கள் இதோ!
தேர்தலில் மக்களின் ஈடுபாடு: கருத்தியல் யுத்தமா? வாழ்வாதார பிரச்சினைகளா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
கிச்சன் கீர்த்தனா: மல்டி வெஜிடபிள் சூப்