தமிழ்நாட்டில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான பல அதிரடி அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
நடப்பு 2023-24-ம் நிதியாண்டில் புதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும் என்றும், சுய உதவிக் குழுக்கள் உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்வதற்காக மதி இணையதளம், மதி சந்தை, மதி திணை உணவகங்கள், மதி அங்காடிகள், மதி எக்ஸ்பிரஸ் வாகனங்களை வழங்குதல் போன்ற பல்வேறு அறிவிப்புகளையும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
அதுமட்டுமல்லாமல் புதிதாக உருவாக்கப்படும் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.15 கோடி நிதியும் ஒதுக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.45,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், ரூ.47,034 கோடி அளவுக்கு கடன் வழங்கப்பட்டிருக்கிறது.
மேலும் நடப்பு நிதி ஆண்டில், 5,000 சுய உதவிக் குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.75 கோடியும், 3,000 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்களுக்கு வறுமை ஒழிப்பு நிதியாக ரூ.7.5 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், 10,000 சுய உதவிக் குழுக்களுக்கு அடிப்படை பயிற்சி வழங்கப்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை விற்பனை செய்வதற்கு ஏதுவாக, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், மாதத்தில் இரண்டு நாட்களுக்கு வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இடம் ஒதுக்கித் தந்துள்ளது. தற்போது இந்தச் சந்தையை ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகளை சந்தைப்படுத்தும் நவீன முயற்சியாக, வாங்குவோருக்கும், விற்போருக்கும் இருக்கும் இடைவெளியைக் குறைக்கவும், சுய உதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை மதி இணையதளம் வழியாக விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகளை பெரு நிறுவனங்கள் மூலமாக விற்பனை செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும், இந்த இணையதளத்தில் அடிக்கடி பொருள்களை வாங்குவோர், விற்போர் சந்திப்புகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது.
அத்துடன் மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி, விற்பனை செய்வதற்காக, சுற்றுலாப் பயணிகள் கூடும் முக்கிய சுற்றுலாத் தளங்களில் மதி அங்காடிகள் தொடங்கப்பட்டு, அதன் மூலம் சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும் என்றும், சிறப்பு சுய உதவிக் குழுவினரின் தயாரிப்புகளை மாநிலம் மற்றும் மாவட்டம்தோறும் எடுத்துச் சென்று விற்பனை செய்வதற்காக மதி எக்ஸ்பிரஸ் எனப்படும் வாகனங்கள் வழங்கப்படவும் உள்ளன.
மேலும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கட்டாயமாக மதி தினை உணவகங்கள் அமைக்கப்படும் என்றும் பல அதிரடி அறிவிப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கிறார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் தீபாவளி சிறப்புச் சந்தை!
பியூட்டி டிப்ஸ்: இயற்கையான முறையில் இளமையாகலாம்… எப்படி?
கிச்சன் கீர்த்தனா : கவுனி அரிசி அல்வா
ஹெல்த் டிப்ஸ்: மழை நாட்களில் அதிகரிக்கும் மூட்டுவலி… காரணமும் தீர்வும்!
பாகிஸ்தானில் முதல் நாள்… வெளியுறவுத்துறை அமைச்சர் செய்தது என்ன?