annnamalai yatra bus getting scratch by thiruvalluvar photo

அண்ணாமலை நடைபயண ரதம்: மீண்டும் சர்ச்சையில் திருவள்ளுவர்

தமிழகம்

பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலைக்காக உருவாக்கப்பட்டுள்ள பேருந்தில் ஒட்டப்பட்டுள்ள திருவள்ளுவரின் புகைப்படம் மீண்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 234 தொகுதிகளுக்கும் நாளை  (ஜூலை 27) முதல் ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் 6 மாதங்கள் பாதயாத்திரை செல்ல உள்ளார்.

ராமேஸ்வரத்தில் தொடங்கும் அண்ணாமலையின் பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைக்க இருக்கிறார். இதில் கலந்து கொள்ள கூட்டணி கட்சிகளுக்கும் பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை ஓய்வெடுப்பதற்காக பல வசதிகளை கொண்ட ஏசி வசதி கொண்ட சொகுசு பேருந்து தயாராகியுள்ளது.

காவி நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த பேருந்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள திருவள்ளுவரின் புகைப்படம் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பல ஆராய்ச்சிகளுக்கு பிறகு திருவள்ளுவரின் உருவத்தை வரைந்தவர் ஓவியப் பெருந்தகை வேணுகோபால்‌ சர்மா.  அதற்கு 1964-ம்‌ ஆண்டு ஒப்புதல்‌ அளித்த தமிழக அரசு, 1967-ம்‌ ஆண்டு அறிமுகப்படுத்தி அது குறித்த அரசாணையும்‌ வெளியிடப்பட்டது. அந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை தான் தற்போது வரை தமிழக அரசு அதிகாரபூர்வமாக பயன்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், திருவள்ளுவரின் உடையை காவி நிறத்தில் மாற்றி, நெற்றியில் பட்டை பூசி, கழுத்தில் ருத்திராட்ச கொட்டை அணிந்திருப்பது போன்று வடிவமைத்து கடந்த 2019 ஆண்டு தனது அதிகாரப்பூர்வ சமூகவலைதளப்பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சை எழுப்பியது தமிழக பாஜக.

இதற்கு தமிழக அரசியல் கட்சிகள், அமைப்புகள் என்று பல தரப்பிலும் கண்டனங்கள் குவிந்தன.

இந்த நிலையில் தான் தற்போது காவி உடை அணிந்த திருவள்ளுவரின் புகைப்படத்தை அண்ணாமலை பயணிக்க உள்ள பேருந்திலும் இடம்பெற செய்துள்ளனர். ஆனால் அதையும் கூட தவறாக செய்துள்ளது தான் இங்கு விஷயமே.

பொதுவாக திருவள்ளுவரின் வலது கையில் எழுத்தாணியும், இடது கையில் ஓலைச்சுவடியும் இருக்கும். 2019 ஆண்டு பாஜக வெளியிட்ட வள்ளுவரின் புகைப்படத்திலும் அப்படி தான் இருக்கும்.

ஆனால் தற்போது போட்டோஷாப்பில் வடிவமைத்த பாஜகவினர், திருவள்ளுவரின் புகைப்படத்தை அப்படியே ’பிளிப்’ செய்து பேருந்தில் ஒட்டியுள்ளனர். பிளிப் என்பது, புகைப்படத்தினை தலைகீழாக மாற்றுவதற்கு பயன்படும். அப்படி செய்யும் போது, வலது பக்கம் இடதாகவோ அல்லது மேல் பாகம் கீழாகவோ மாறும்.

இங்கு பாஜகவினர் திருவள்ளுவரையே பிளிப் செய்ததால்,  அவரது வலது கையில் ஓலைச்சுவடியும், இடது கையில் எழுத்தாணியும் என மாறியுள்ளது.

ஏற்கெனவே திருவள்ளுவரின் உடையை மாற்றி சர்ச்சையில் சிக்கிய பாஜக, தற்போது அவரை இடது கையில் எழுதும் பழக்கம் கொண்டவராக சித்தரித்துள்ளது சமூகவலைதளங்களில் மேலும் அதிருப்தியை எழுப்பியுள்ளது. வலதுசாரியாக இருந்த வள்ளுவரை இடதுசாரியாக மாற்றியுள்ளது பாஜக என்றும் கருத்துகள் எழுந்துள்ளன.

மேலும் கடந்த ஆண்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொண்டார். அப்போது அவர் ஓய்வெடுப்பதற்காக தங்கிய பேருந்தை ஆடம்பரம் என பாஜகவினர் விமர்சனம் செய்தனர்.

இந்தநிலையில், தற்போது பாதயாத்திரை மேற்கொள்ளும் அண்ணாமலை, தொண்டர்களை சந்திப்பதற்காக மேற்கூரை, ஏசி வசதிக்கொண்ட சொகுசு பேருந்தும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

கருப்பு உடையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள்: 6வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்!

ஒரே நாளில் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் ’யோக்கியன்’

+1
0
+1
2
+1
0
+1
2
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *