அண்ணாமலையார் கோவிலில் இன்று (டிசம்பர் 6) அதிகாலை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த நவம்பர் 27-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான இன்று பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படுகிறது. இதற்காக தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளார்கள்.

இன்று அதிகாலை 3.45 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களுடன் பரணி தீபம் ஏற்றப்பட்டது. பரணி தீபத்தை அண்ணாமலையார் சன்னதிக்கு கொண்டு வந்து கற்பூர தீபத்தால், ஐந்து பஞ்ச பூதங்களை விளக்கும் வகையில் ஐந்து தீபங்கள் ஏற்றப்பட்டது.
பரணி தீபத்தை காண நான்காயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பரணி தீப நிகழ்சியில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. மகா தீபத்தை காண ஆறாயிரம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மகா தீபத்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக திருவண்ணாமாலைக்கு 2,700 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
செல்வம்