அண்ணா பல்கலைக் கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் போலீசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் கடந்த 23ஆம் தேதி இரவு தனது காதலருடன் இருந்த போது, அங்கே வந்த இரண்டு பேர் அவர்கள் இருவரையும் வீடியோ எடுத்துள்ளனர்.
தொடர்ந்து அந்த மாணவியை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைவெளியே சொன்னால், வீடியோவை லீக் செய்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவி கோட்டூர்புரம் போலீஸில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பல்கலை வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரித்தனர்.
இந்தநிலையில் இன்று (டிசம்பர் 25) போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “காவல் அதிகாரிகள் பல்கலைக்கழக உள் புகார் குழுவின் (ICC-POBH) ஒத்துழைப்புடன் விசாரணை/ செய்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக குற்றவாளியை கைது செய்வதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
புலன் விசாரணையின் போது அறிவியல் பூர்வமான ஆதாரங்களின் அடிப்படையில் கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன், (37) இந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார். சந்தேக குற்றவாளியும் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இவர் நடைபாதையில் பிரியாணி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் வேறு ஏதாவது குற்ற செய்கையில் ஈடுபட்டிருக்கிறாரா என்று விசாரணை நடைபெறுகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டு பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். சென்னை காவல் துறை அதிகாரிகளும், பல்கலைக்கழக பாதுகாப்பு அதிகாரிகளும் சேர்ந்து ஆலோசனை செய்து (Joint security Review)மாணவிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா