அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் இன்று (ஜனவரி 20) அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த மாதம் 23 ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
அதற்கு மறுநாள் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து பல்கலை வளாகத்தில் இருந்த சிசிடிவி அடிப்படையில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யும்போது தப்பிக்க முயன்ற அவர் தடுக்கி விழுந்ததில் கை, காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவனையில் உள்ள சிறை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு காலில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் அடுத்த சில நாட்களில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரித்து வருகிறது. இந்த நிலையில் ஞானசேகரனை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் எஸ்.ஐ.டி மனுத்தாக்கல் செய்திருந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், ஞானசேகரன் மாலை 3 மணிக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் பூட்டிய அறையில் வைத்து சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீதிபதி சுப்பிரமணியன் விசாரணை மேற்கொண்டார்.
தொடர்ந்து ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவுக்கு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி அனுமதி அளித்து உத்தரவிட்டார்;
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா