அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் இன்று (ஜனவரி 22) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அண்ணா நகர் துணை கமிஷனர் சினேக பிரியா உள்ளிட்ட மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டது.
சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஞானசேகரனை 7 நாட்கள் போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு சுப்பிரமணியன், ஞானசேகரனை 7 நாட்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து கடந்த ஜனவரி 20-ஆம் தேதி உத்தரவிட்டார்.
அன்றைய தினம் எழும்பூர் காவல் நிலையத்தில் ஞானசேகரனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அண்ணா நகர் துணை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு ஞானசேகரனை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில், இன்று காலை ஞானசேகரனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் உடனடியாக அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அண்ணா நகர் துணை காவல் ஆணையர் சினேக பிரியா மருத்துவமனைக்கு சென்று ஞானசேகரனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை விவரங்கள் குறித்து கேட்டறிந்தார்.