தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். Anna university exam fee hike
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 400-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் ஆண்டுதோறும் 1 லட்சத்திற்கும் அதிகமான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.
இந்த கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் தற்போது செமஸ்டர் தேர்விற்கு தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் அண்ணா பல்கலைகழத்தின் தேர்வு கட்டணம் 50 சதவீதம் உயர்த்தப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது.
தேர்வு கட்டணம், டிகிரி சான்றிதழ் கட்டணம், ப்ராஜெக்ட் கட்டணம் ஆகியவற்றுக்கு பல்கலைக்கழக சிண்டிகேட் குழு ஒப்புதல் வழங்கிய நிலையில் இந்த கட்டண உயர்வு மாணவ, மாணவிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் தான் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “இந்த ஆண்டு கட்டணம் உயர்த்தப்படாது. அடுத்த செமஸ்டர் முதல் கட்டண உயர்வு அமலுக்கு வரும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தேர்வு கட்டண உயர்வு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் அறிவித்துள்ளார்.
இது குறித்து சென்னையில் இன்று (நவம்பர் 28) செய்தியாளர் சந்திப்பில் பேசிய துணை வேந்தர் வேல்ராஜ், “தேர்வு கட்டணத்தை 50 சதவீதம் உயர்த்தியது அதிகம் என்று மாணவர்கள் முறையிட்டுள்ளனர். 9 வருடங்களுக்கு பிறகு தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தேர்வு தாள்களை திருத்துவதற்கான செலவு அதிகமாக இருப்பதால் 50 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் நமது நாட்டின் வளர்ச்சி படி 100 சதவீதம் தான் கட்டணத்தை உயர்த்தி இருக்க வேண்டும்.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிண்டிகேட்டில் முடிவு எடுக்கப்பட்டு இந்த வருடத்தில் இருந்து உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தால் அனைத்து கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதன்படி பல கல்லூரிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டுவிட்டது. ஆனால் சில கல்லூரிகள் மற்றும் மாணவர்களிடம் இருந்து முறையீடு வந்துள்ளது. இது குறித்து உயர் கல்வித்துறை அமைச்சரிடம் விளக்கம் அளித்துள்ளோம்.
கடந்த 4 மாதங்களுக்கு முன்னால் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இது குறித்து முடிவெடுக்க வேண்டும் என்பதால் கட்டண உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த செமஸ்டருக்கு பழைய தேர்வு கட்டணத்தை வசூலிக்கவும் கூறியுள்ளார். ஏற்கனவே கட்டணம் செலுத்திய மாணவர்கள் மீண்டும் கட்டணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். Anna university exam fee hike
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
’7 ஜி ரெயின்போ காலனி 2′ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஓவரா?
அமானுஷ்ய கிராமம்… போராடும் ஆர்யா: தி வில்லேஜ் ட்ரெய்லர் எப்படி?