கமிஷனர் அருணுக்கு நிம்மதி… உச்சநீதிமன்றம் கொடுத்த தற்காலிக ரிலீஃப்!

Published On:

| By Selvam

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் அருணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இன்று (ஜனவரி 27) இடைக்கால தடை விதித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில், “மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த வேண்டும்.

செய்தியாளர் சந்திப்பை நடத்தி, விசாரணை விவரங்களை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்ததற்காக, சென்னை போலீஸ் கமிஷனர் மீது, தேவைப்பட்டால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு டிசம்பர் 28-ஆம் தேதி உத்தரவிட்டது.

கமிஷனர் அருணுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்று அதிமுக, பாஜக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் நாகரத்னா, சதிஷ் சந்திரா ஷர்மா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சித்தார்த் லூத்ரா ஆஜராகி, “எஃப்.ஐ.ஆர்-ஐ பழைய குற்றவியல் சட்டத்திலிருந்து புதிய குற்றவியல் சட்டத்திற்கு மாற்றியபோது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தனிப்பட்ட விவரங்கள் கசிந்தன.

எஃப்.ஐ.ஆரின் விவரங்களைத் தடுக்குமாறு உடனடியாக சி.சி.டி.என்.எஸ்-க்கு அரசு கடிதம் எழுதியது. எஃப்.ஐ.ஆர் விவரங்களை கசியவிட்ட நபர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

எஃப்.ஐ.ஆர் பதிவிறக்கம் செய்யக்கூடிய அனைத்து இணைப்புகளும் தடுக்கப்பட்டுள்ளது. அவை தொடர்ந்து தடுக்கப்படும். இந்தத் தவறுகளுக்கு காவல் ஆணையரைக் காரணம் காட்ட முடியாது. சிறப்பு விசாரணைக் குழுவின் விசாரணையை நாங்கள் எதிர்க்கவில்லை” என்று வாதிடப்பட்டது.

கேவியட் மனுதாரர்கள் தரப்பில், “குற்றம்சாட்டப்பட்ட நபர் திமுகவின் ஆதரவாளர். வேறு யாரெல்லாம் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்று கமிஷனர் அருண் விசாரிக்கவில்லை” என்ற வாதத்தை முன்வைத்தனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். மேலும், சிறப்பு புலனாய்வு குழு போலீசார் தங்களது விசாரணையை தொடரலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share