பாலியல் வன்கொடுமை… எஃப்.ஐ.ஆரை டவுன்லோட் செய்த 14 பேரிடம் விசாரணை… உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு

Published On:

| By Selvam

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், எஃப்.ஐ.ஆரை பதிவேற்றம் செய்த 14 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர் என தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் இன்று (டிசம்பர் 28) தெரிவிக்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கோட்டூர்புரம் காவல்துறையினர், ஞானசேகரன் என்ற நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வரலெட்சுமி, மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்ற நிலையில், இன்று நீதிபதிகள் லெக்‌ஷ்மி நாராயணன், எஸ்.எம்.சுப்ரமணியன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஆஜராகி, மாணவி பாலியல் வன்கொடுமை விசாரணை குறித்த உள்துறை செயலாளரின் அறிக்கையை மூடி முத்திரையிட்ட உறையில் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து அவர், “காவல்துறை எஃப்.ஐ.ஆரை வெளியிடவில்லை. கோட்டூர்புரம் போலீசார் எஃப்.ஐ.ஆர் தயாரித்த பின்னர் அது இணையதளத்தில் பதிவாகி விட்டது. பின்னர் இணையத்தில் பதிவான எஃப்.ஐ.ஆர் முடக்கப்பட்டது. எஃப்.ஐ.ஆரை டவுன்லோட் செய்த 14 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர்” என்றார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், “எஃப்.ஐ.ஆரை முடக்கிய பின்னர் 14 பேர் எப்படி பார்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அட்வேட் ஜெனரல், “ஐபிசியில் இருந்து பிஎன்எஸ்-க்கு மாற்றியபோது தொழில்நுட்ப கோளாறு காரணமாக தடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. எஃப்.ஐ.ஆரை யார் வெளியிட்டது என சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்னும் ஓரிரு வாரங்களில் எஃப்.ஐ.ஆரை லீக் செய்தது யார் என்ற விவரங்கள் தெரிவரும்.

எஃப்.ஐ.ஆர் விவகாரத்தில் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும். ஊடகவியலாளர்களின் பங்கு குறித்தும் போலீசார் நிச்சயமாக விசாரணை நடத்துவார்கள்” என்றார்.

அப்போது நீதிபதி சுப்பிரமணியன், “எஃப்.ஐ.ஆரில் பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றம் சாட்டுவது போல் உள்ளது. பெண்கள் தங்கள் வசதிக்கேற்ப உடை அணிவதால் தான் இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது என்பது போல தான் எஃப்.ஐ.ஆரில் உள்ளது” என்று தெரிவித்தார்.

செல்வம்

17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: அப்போது ‘சிங்கம் அண்ணா’ செய்த காரியம்!

மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்கீடு: மத்திய அரசு உறுதி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share