விழுப்புரம் அருகே பேரறிஞர் அண்ணா சிலைக்கு மர்மநபர்கள் செருப்பு மாலை அணிவித்தும், கரும்புள்ளிகளுடன் ஆ.ராசா புகைப்படத்தை தொங்கவிட்டும் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரியார் திடலில் கடந்த 6ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில், திமுக துணை பொதுச் செயலாளரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மனுஸ்மிருதி குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆ.ராசாவுக்கு மிரட்டல் கொடுக்கும் வகையில் பேசியதால் கோவை மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டார்.
ஆ.ராசாவின் பேச்சைக் கண்டித்தும், பாஜக கோவை மாவட்ட நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்தும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில், இன்று (செப்டம்பர் 26) கோவை மாவட்டத்தில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில், நேற்று நள்ளிரவில் விழுப்புரம் மரக்காணம் அருகேயுள்ள வானூர் கண்டமங்கலம் பகுதியில், புதுச்சேரி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்தும்,
ஆ.ராசா புகைப்படத்தில் கரும்புள்ளிகள் குத்தி அண்ணா சிலை மீது தொங்கவிட்டும் சென்றுள்ளனர்.
மேலும், அண்ணா சிலையின் முகத்தை தி.மு.க. கொடி கொண்டு மூடியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கண்டமங்கலம் போலீசார், அண்ணா சிலைக்கு அணிவித்திருந்த செருப்பு மாலை மற்றும் கொடியை அகற்றினர். ஆ.ராசாவின் படத்தையும் அகற்றினர்.
இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வரும் கண்டமங்கலம் போலீசார் அண்ணா சிலைக்கு செருப்பு மாலை அணிவித்த மர்மநபர்களையும் தேடி வருகின்றனர்.
இப்பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணா சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள சசிகலா, இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டிருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அதுபோன்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கண்டனம்தெரிவித்துள்ளார்.
செல்வம்
அதிமுக அலுவலகத்தில் எடப்பாடி ஆய்வு!
அமைச்சரவை கூட்டம் : விவாதித்தது என்ன?