ரூ.51 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
திண்டுக்கல்லை சேர்ந்த மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற புகாரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் டிசம்பர் 1-ஆம் தேதி கைது செய்தனர்.
அவரை திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் திண்டுக்கல் சிறையிலிருந்து மதுரை மத்திய சிறைக்கு அங்கித் திவாரி மாற்றப்பட்டார்.
இதனை தொடர்ந்து திண்டுக்கல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி அங்கித் திவாரி மனுத்தாக்கல் செய்திருந்தார். அவரது ஜாமீன் மனு டிசம்பர் 5-ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில், அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக அங்கித் திவாரி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். இதனை தொடர்ந்து அங்கித் திவாரியை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுமதியளித்து நீதிபதி மோகனா, உத்தரவிட்டுள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மழை, வெள்ள பாதிப்பு: விஜய் மக்கள் இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்!
ஐயப்ப பக்தர்கள் மீது தாக்குதல்… அண்ணாமலை கண்டனம்: அறநிலையத்துறை விளக்கம்!