ankit tiwari bail petition dismissed

அங்கித் திவாரி ஜாமீன் மனு தள்ளுபடி: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

தமிழகம்

லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (டிசம்பர் 20) தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் லஞ்சம் பெற்ற வழக்கில் மதுரை மண்டல அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

தற்போது அவர் மதுரை மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் உள்ளார். அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்க திண்டுக்கல் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

இந்தநிலையில், ஜாமீன் கோரி அங்கித் திவாரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணை நேற்று (டிசம்பர் 19) நீதிபதி சிவஞானம் முன்பாக விசாரணைக்கு வந்தது.

தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகது ஜின்னா ஆஜராகி,

“அங்கித் திவாரியிடம் விசாரணை செய்ததில், மேலும் சில அதிகாரிகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததது.

இதனால் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அங்கித் திவாரி லேப்டாப்பில் இருந்து முக்கியமான ஆவணம் சிக்கியுள்ளது.

75 பேரின் பெயர் பட்டியல் கிடைத்துள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

அங்கித் திவாரி தரப்பில், “பொய்யான குற்றச்சாட்டில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அதிகாரி என்பதால் அவர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதிடப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி சிவஞானம், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

அரசு பேருந்துகளில் கட்டணமின்றி நிவாரண பொருட்கள் அனுப்பலாம்: அமைச்சர் சிவசங்கர்

ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம்: தயாரிப்பாளரின் திட்டத்திற்கு கமல் ஆதரவு!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0