கோயில்களில் பக்தி மணம் கமழ்ந்து மனதை நிறைக்கும் அதேநேரம், அங்கே கொடுக்கப்படும் பிரசாதமோ வயிற்றை இதமாக நிறைக்கும்.
காலங்கள் பலவானாலும், கோயில் பிரசாதங்கள் நம் மனங்களில் இருந்து மறையவே மறையாது, அதற்குக் காரணம்… அவற்றின் தனிச்சுவைதான்.
பிரசித்தி பெற்ற அத்தகைய கோயில் பிரசாதமான ஆஞ்சநேயர் வடையை வீட்டிலேயே செய்து சுவைக்க இந்த ரெசிப்பி உதவும்.
என்ன தேவை?
உளுத்தம் பருப்பு – 250 கிராம்
மிளகு – 2 டேபிள்ஸ்பூன்
கல் உப்பு – தேவையான அளவு
அரிசி மாவு – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள் – சிறிது
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.
எப்படிச் செய்வது?
உளுந்தை தண்ணீரில் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். தண்ணீர் இறுத்து, மிக்ஸியில் கொரகொரப்பாக அரைக்கவும். இதில் லேசாக தண்ணீர் தெளித்து மிளகு, உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து ஒரு சுழற்று சுழற்றி வழித்தெடுத்து ஒரு பாத்திரத்தில் வைக்கவும்.
அதோடு அரிசி மாவைக் கலந்துகொள்ளவும். இலையில் சிறிது எண்ணெய் தடவி, சிறிதளவு மாவெடுத்து, மெல்லிய வடையாகத் தட்டி (தட்டை போல மெல்லியதாக), நடுவில் துளை இடவும்.
அதை எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். வடை எவ்வளவுக்கு எவ்வளவு மெல்லியதாக இருக்கிறதோ, ஆஞ்சநேயருக்கு மாலையாகச் சாத்தும்போது அந்தளவுக்கு வளைந்துகொடுக்கும்.