வளர்ப்பு நாயைக் கொன்றதாக ட்விட்டரில் பதிவிட்ட எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்குமாறு விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
பேசி, பேசியே சர்ச்சையில் சிக்கிக் கொள்பவர் பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளரான எச்.ராஜா. பேச்சு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அவரது பதிவுகளும் சர்ச்சைகளை கிளப்பும்.
அதன்பிறகு அதை நான் செய்யவில்லை, என் அட்மின் என்று சொல்லி தப்பித்துக் கொள்ளவும் முயற்சிப்பார்.
அந்த வகையில் தற்போது அவர் போட்ட ட்விட்டர் பதிவே அவரை சிக்க வைத்திருக்கிறது.
கடந்த செப்டம்பர் 21ம் தேதி எச்.ராஜா தனது ட்விட்டரில், எங்கள் வீட்டில் அல்சேசன் நாய் ஒன்றை பிரியமாக வளர்த்தோம்.
ஆனால் அதற்கு வெறிபிடித்தது. இதனால் நாய் பிடிப்பவரிடம் சொன்னோம். அவர் மூங்கிலால் அதன் மண்டையில் ஒரே போடு போட்டார். நாய் இறந்துவிட்டது. வருத்தமாக இருக்கிறது. என்ன செய்வது என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவைப் பார்த்த விலங்கு நல ஆர்வலரான ஸ்வப்னா சுந்தர் என்பவர் ஹெச்.ராஜா மீது விலங்கு நல வாரியத்தில் புகார் செய்திருந்தார்.
எச்.ராஜாவின் ட்விட்டர் பதிவு தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ள இந்திய விலங்கு நல வாரியம் சிவகங்கை மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
விசாரணை நடத்தி ஏழு நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மிருக வதை தடை சட்டம் 1960 பிரிவு 11 படி, தெருநாய் உட்பட எந்த விலங்கையும் துன்புறுத்துவது தண்டனைக்குரியதாகும்.
அதேபோன்று இந்திய தண்டனை சட்டம் 429 படி, எந்த விலங்கையும் கொலை செய்தாலோ, விஷம் கொடுத்தாலோ 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கலை.ரா
மது அருந்தினால் பணி நீக்கம்: பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு எச்சரிக்கை!