தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் கோயிலில் ஆனி தேரோட்டம் இன்று (ஜூலை 2) கோலாகலமாக துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், நெல்லை மாநகராட்சியின் மேயர், துணை மேயர் , மற்றும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வஹாப், உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்து துவங்கி வைத்தனர். இதில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி உட்பட தென்மாவட்ட பக்தர்கள், கேரளாவில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமைக்குரிய நெல்லையப்பர் தேரினை “தென்னாடுடைய சிவனே போற்றி” “என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்ற மந்திரம் முழங்க பொதுமக்கள் தேரினை வடம் பிடித்து இழுக்க துவங்கினர்.
தேரோட்டத்தினை முன்னிட்டு நான்கு ரத வீதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயில் பகுதியில் மட்டும் சுமார் 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நான்கு ரத வீதிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நிகழாமல் இருப்பதற்காக ரோந்து பணியிலும் காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மூலவரின் தேரானது நிலைக்கு வந்த பிறகு அம்மன் தேர் , மற்றும் முருகன் தேரினை, பொதுமக்கள் இழுக்க துவங்குவார்கள். காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த தேரோட்டம் மாலை 4 அல்லது 5 மணிக்குள் நிலைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜபாளையத்தில் பிரசித்தி பெற்ற மாயூரநாத சுவாமி கோயில், வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயில் தேரோட்டமும் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
சரவணன்
ராஜினாமா முடிவெடுத்தது ஏன்?: மணிப்பூர் முதல்வர்!
வெ.இறையன்பு: ஐஏஎஸ் பதவிக்கு ஓர் இலக்கண இலக்கியம்!