சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அரியலூர் மாவட்டத்தில் வரும் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைப்பயணம் செய்ய உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சமூகப் பிரச்சினைகளுக்காக தொடர்ந்து குரல்கொடுத்து வருகிறார். ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் குறித்து தொடர்ந்து குரல்கொடுத்தவர்களில் அன்புமணி ராமதாஸும் ஒருவர். இப்படி, பல பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் அவர், கடந்த ஆகஸ்ட் 19ம் தேதி, தர்மபுரியில் காவிரி உபரி நீர் திட்டத்தினை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாட்கள் நடைப்பயணம் மேற்கொண்டார்.
பசுமை தாயகம் அமைப்பு சார்பில் சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் நேற்று காலை (அக்டோபர் 9) ’சென்னை ஓட்டம்’ என்ற பெயரில் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பிரசார ஓட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் டாக்டர் சவுமியா தலைமை தாங்கினார்.
இதில் டாக்டர் அன்புமணி ராமதாஸ், பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நடிகர் சித்தார்த், இயக்குநர் விக்னேஷ் சிவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிலையில், அரியலூரில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி நடைப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதுகுறித்து அவர் இன்று (அக்டோபர் 10) வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “காவிரி பாசன மாவட்டங்களுக்கு இணையான வளத்தையும், வளர்ச்சியையும் கொண்டிருக்க வேண்டிய அரியலூர் மாவட்டம், அவற்றில் கடைநிலை மாவட்டங்களில் ஒன்றாக தடுமாறிக் கொண்டிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் இல்லாத அளவுக்கு பாசனக் கட்டமைப்புகள் அரியலூர் மாவட்டத்தில் சோழர் காலத்திலேயே உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அவை பராமரிக்கப்படாததுதான் இதற்குக் காரணம்.
தமிழகத்தின் மிகச்சிறிய மாவட்டங்களில் ஒன்றான அரியலூரில் மொத்தம் 632 ஏரிகள் உள்ளன. கடலுடன் ஒப்பிடக்கூடிய கொள்ளிடம் என்ற மிகப்பெரிய ஆறும், மருதையாறும் அரியலூர் மாவட்டத்தில்தான் பாய்கின்றன. ஆனாலும் அரியலூர் மாவட்டம் இன்னும் வறண்ட பூமியாகத்தான் உள்ளது. அங்கு மிகக்குறைந்த அளவில்தான் பாசன வசதி பெற்ற நிலங்கள் உள்ளன.
கி.பி. 9ம் நூற்றாண்டில் தொடங்கி 11ம் நூற்றாண்டு வரை அரியலூர் மாவட்டத்தில் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய பாசனக் கட்டமைப்புகள் வியக்கவைக்கக் கூடியவை. சோழர்கால பாசனக் கட்டமைப்புகளை மீட்டெடுப்பதன் மூலம் அரியலூர் மாவட்டத்தில் வேளாண்மை தொழில் வெகுசிறப்பாக வளரும். மாவட்டத்தின் பல பகுதிகள் இயற்கைச் சுற்றுலா மையங்களாக மாறும்.
அதனால் வேலைவாய்ப்புகள் பெருகும். இதுவரை அரியலூர் மாவட்டத்தில் வேலை இல்லை என்று கூறி வெளியூருக்கு வாழ்வாதாரம் தேடிச் சென்றவர்கள், மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பி வளமாக வாழ முடியும். அரியலூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்கு இதைவிட சிறந்த கனவுத் திட்டம் இருக்க முடியாது. அதனால்தான், அரியலூர் சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அக்டோபர் 29 மற்றும் 30 ஆகிய இரு நாட்களும் அரியலூர் மாவட்டத்தில் எழுச்சி நடைபயணம் மேற்கொள்ள தீர்மானித்திருக்கிறேன்.
அரியலூர் மாவட்டத்தின் கீழப்பழுவூரில் தொடங்கும் எழுச்சி நடைபயணம் கரைவெட்டி, கண்டராதித்தம், திருமானூர் வழியாக காட்டுமன்னார்கோயில் என்ற இடத்தில் நிறைவடையும். அரியலூர் மாவட்டத்தை வளப்படுத்த வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் எனது தலைமையில் நடைபெறும் இந்த நடைபயணத்தில், அரசியலைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் கலந்துகொண்டு ஆதரவளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார்.
பொன்னியின் செல்வன் படத்தை வைத்து ராஜராஜ சோழன் என்ன ஜாதி, என்ன மதம் என்பது பற்றிய வீண் சர்ச்சைகள் வலம் வந்துகொண்டிருக்கும் நிலையில்… சோழர்கள் கால பாசனத் திட்டங்கள் பற்றிய அவசியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறார் அன்புமணி.
ஜெ.பிரகாஷ்
இன்னொரு மொழிப் போரை திணிக்காதீர் : முதல்வர் மு.க.ஸ்டாலின்
சீனியர்களுக்கு பயப்படுகிறாரா ஸ்டாலின்?: திமுக அதிமுக மோதல்!