தீபாவளி டாஸ்மாக் விற்பனை : அன்புமணி காட்டம்!
தீபாவளி பண்டிகைக்கு தமிழக அரசு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்வது என்பது வெட்கக்கேடானது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கோவை கணபதி புதூர் பகுதியில் பாமக கட்சி அலுவலகத்தை திறந்து வைத்த பின்னர் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று (அக்டோபர் 21) செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “20 ஆயிரம் போலீசாரை போதை தடுப்பு பிரிவில் தமிழக அரசு உடனடியாக பணியமர்த்த வேண்டும். போதை பொருளை தடுப்பதை மிக முக்கியமான பணியாக தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.
நீலகிரி பகுதியில் பசும் தேயிலை ஒரு கிலோ ரூ.12 முதல் ரூ.15-க்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்கிறது.
இப்போதுள்ள சூழலில் அந்த தொகை விவசாயிகளுக்கு போதுமானதாக இருக்காது. தமிழக அரசு இதில் தலையிட்டு பசும் தேயிலையை கூடுதல் விலைக்கு தனியார் நிறுவனங்கள் கொள்முதல் செய்ய வழிவகை செய்ய வேண்டும்
மின்சார உயர்வு, போக்குவரத்து கட்டண உயர்வு , வீட்டு வரி உயசர்வு, பால் விலை உயர்வை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் வருமானம் குறைந்து வருகிறது. வேலைவாய்ப்புகள் இல்லை. புதிய வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
தீபாவளிக்கு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறார்கள். இதனை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. கல்வி, விவசாயம், சுகாதாரத்திற்கு இலக்கு நிர்ணயம் செய்யுங்கள். டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயம் செய்வது என்பது வெட்கக்கேடானது.
தீபாவளிக்கு முந்தைய நாள் மற்றும் தீபாவளிக்கு பிந்தைய நாள் டாஸ்மாக் கடையை மூடுங்கள்.
விவசாயத்திற்காக பவானி சாகர் அணையை போன்று இன்னும் இரண்டு அணைகளை தமிழக அரசு கட்ட வேண்டும். சென்னைக்கு குடிநீர் ஆதாரத்திற்காக பத்து ஏரிகளை உருவாக்க வேண்டும்.
இந்தி என்பது இந்தியாவில் உள்ள 22 அலுவல் மொழிகளில் ஒன்று. இந்தி மொழியை மற்ற மாநிலங்களில் ஏன் பாஜக அரசு திணிக்கிறது? என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
செல்வம்
விஷவாயு தாக்கி 3 பேர் பலி: தனியார் விடுதியில் கொடூரம்!
தொடரும் விபத்து: அருணாச்சலில் விழுந்து நொறுங்கிய ஹெலிகாப்டர்!