இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நாளில் நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 25) 186 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வு நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்குத் தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டு 10 மணிக்கு மேல் தாமதமாகத் தேர்வு தொடங்கியது.
தேர்வு எவ்வளவு நேரம் தாமதமாகத் தொடங்கியதோ அவ்வளவு நேரம் கூடுதலாக வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. அதுமட்டுமின்றி மதியம் 2 மணிக்குத் தொடங்கவிருக்கும் பொதுத்தேர்வும் 30 நிமிடங்கள் தாமதமாக 2.30 மணிக்குத் தொடங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று நடைபெறும் குரூப் 2 தேர்வை ரத்து செய்துவிட்டு வேறு ஒரு நாளில் தேர்வை நடத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் இன்று நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 முதன்மை தேர்வு ஏராளமான குளறுபடிகளுடன் மிகவும் தாமதமாகத் தொடங்கியுள்ளது. பல தேர்வு மையங்களில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததுதான் இக்குழப்பத்திற்கும் தாமதத்திற்கும் காரணமாகும்.
பல இடங்களில் தேர்வர்களுக்கு வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, அவற்றின் பதிவு எண்கள் தவறாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் பல இடங்களில் வினாத்தாள் வெளியாகிவிட்டது. டி.என்.பி.எஸ்.சியின் அலட்சியமே இதற்குக் காரணம்.
போட்டித்தேர்வுகளில் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட வேண்டும். தேர்வர்களுக்கு மன உளைச்சல், பதற்றம் இல்லாத சூழல் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆனால் இன்றைய தேர்வில் சமவாய்ப்பும் இல்லை, மன உளைச்சல் இல்லாத சூழலும் ஏற்படுத்தப்படவில்லை.
சமவாய்ப்பு அற்ற சூழலில் நடத்தப்படும் தேர்வுகளில் சமநீதி கிடைக்காது. எனவே இன்றைய தேர்வை உடனடியாக ரத்துசெய்துவிட்டு, அனைத்து குளறுபடிகளையும் களைந்துவிட்டு, வேறு ஒருநாளில், அமைதியான சூழலில் இத்தேர்வை டி.என்.பி.எஸ்.சி மீண்டும் நடத்தவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
வசூலில் ரூ.1000 கோடியை கடந்த ‘பதான்’!
இதுவரை 6 வீரர்கள் அவுட்… கடும் நெருக்கடியில் தவிக்கும் ஆஸ்திரேலியா