protest teachers meeting failed

அமைச்சர் – ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வி!

தமிழகம்

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று(அக்டோபர் 2) நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

ஒருவாரத்திற்கு மேலாக தொடரும் போராட்டம்!

சம வேலைக்கு சம ஊதியம், போட்டி தேர்வுக்கு மறுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் (டிபிஐ)  மூன்று ஆசிரியர்கள் சங்கங்களின் சார்பில் உண்ணாவிரதம் மற்றும் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் சார்பில், இடைநிலை ஆசிரியர்கள், அரசு உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்கத்தினர் ஆகியோர் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்களும், இசை, ஓவியம், தையல் பயிற்சி ஆகியவற்றுக்கான பகுதிநேர சிறப்பு ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல, புதிய ஆசிரியர் நியமனங்களுக்கு போட்டித்தேர்வு நடத்தும் முடிவை கைவிடக் கோரி, டெட் தேர்வு எழுதியுள்ள ஆசிரியர்களும் போராடி வருகின்றனர்.

போராட்ட களத்தில் சிகிச்சை!

சுமார்‌ 7 ஆயிரம்‌ ஆசிரியர்கள்‌ இரவு பகலாக நடத்தி வரும் போராட்டத்தில் இன்று வரை 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் சோர்வடைந்து மயக்க நிலைக்கு சென்றனர்‌. அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சிலர் மருத்துவமனைக்கு செல்லாமல் போராட்ட களத்திலேயே சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.

இதுதொடர்பாக நேற்று உயர் அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், இன்றும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

ஆசிரியர்களின் இந்த போராட்டத்திற்கு, பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மீண்டும் பேச்சுவார்த்தை தோல்வி!

இந்த நிலையில் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தங்கள் கோரிக்கைகளை நேரடியாக ஆசிரியர்கள் அமைச்சர் முன்பு எடுத்துக்கூறினர்.

எனினும் அரசு சார்பில் எந்தவிதமான உறுதியான பதிலையும் அமைச்சர் அன்பில் மகேஷ் அளிக்காத நிலையில், பேச்சுவார்த்தை மீண்டும் தோல்வியில் முடிந்துள்ளது.

இதனையடுத்து ஆசிரியர்களின் சார்பில் போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆசிரியர்களின் கோரிக்கை 13 வகையாக பிரிக்கப்பட்டது என்றும், அவற்றில் நிதி நெருக்கடி இல்லாமல் எதை உடனடியாக முதலில் அமுல்படுத்த முடியுமோ அதை செய்வோம் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“காந்தாரா” பட பாடலால் ஏற்பட்ட தீ விபத்து..! சிறுவர்கள் படுகாயம்!

பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியீடு!

+1
0
+1
1
+1
1
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *