பள்ளிகளில் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 23 பேரை பணியில் இருந்து நீக்கி அமைச்சர் அன்பில் மகேஸ் இன்று (மார்ச் 11) உத்தரவிட்டுள்ளார். anbil mahesh dismissed 23 school staffs
தமிழகம் முழுவதும் தொடர்ந்து அரங்கேறி வரும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் திமுக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்றங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதன்காரணமாக அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன.
இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று அதிரடி உத்தரவினை வெளியிட்டார்.
கடந்த மாதம் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஸ் “தமிழகம் முழுவதும் கடந்த மூன்றாண்டுகளில் பள்ளி மாணக்கர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 238 பேர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதில் 46 வழக்குகள் இறுதி விசாரணையில் இருக்கிறது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத 23 பேரை டிஸ்மிஸ் செய்து அன்பில் மகேஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மீதமுள்ளவர்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.