புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் நடந்த மொய்விருந்து விழாவில் ரூ.15 கோடி வசூலாகியுள்ளது. இதனால் மொய்விருந்து நடத்தியவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் ஆனி மாதம் தொடங்கி ஆவணி மாதம் வரையில் மொய்விருந்து விழாக்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக மொய் விருந்து விழாக்கள் களை இழந்து காணப்பட்ட நிலையில் இந்த ஆண்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஆனி மாதம் இறுதி முதல் புதுக்கோட்டை தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களில் மொய்விருந்து விழாக்கள் களைக்கட்ட தொடங்கியது.

இந்த ஆண்டிற்கான மொய் விருந்து விழாக்கள் நிறைவடையும் நிலையில் கடந்த 14ஆம் தேதி நெடுவாசல் கிராமத்தில் 31 பேர் இணைந்து ஒரு பொது இடத்தில் மொய் விருந்து விழா வைத்துள்ளனர்.
மொய் விருந்தை முன்னிட்டு வங்கி ஊழியர்களும் வரவழைக்கப்பட்டனர். பணம் எண்ணும் இயந்திரமும் கொண்டு வந்து வைக்கப்பட்டது.

விருந்துக்கு வந்தவர்கள் வயிறார சாப்பிட்டு மொய் வைத்தனர். கைப்பணமாக மட்டுமல்லாமல் ஆன்லைனிலும் பண பரிவர்த்தனை நடந்தது.
விழாவின் முடிவில் 31 பேருக்கும் சேர்த்து ஒரே நாளில் சுமார் 15 கோடி ரூபாய் வரையில் மொய் வசூல் ஆகியுள்ளது.
இதில் அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் ரூ.2.50 கோடி மொய் வசூல் ஆகியுள்ளது.

மேலும் அந்த விழாதாரர்களில் 20க்கும் மேற்பட்டோருக்கு தனிப்பட்ட முறையில் தலா 50 லட்சம் ரூபாய் வரையில் மொய் தொகை வசூல் ஆகி உள்ளது.
இதனால் விழாவை நடத்தியவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு முன்னதாக 2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட மொய் விருந்தில் விவசாயி கிருஷ்ண மூர்த்தி என்பவருக்கு மட்டும் 4 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
அந்த ஆண்டு கஜா புயலின் காரணமாக மொய் விருந்தில் அவ்வளவு வசூல் ஆகவில்லை என்று புதுகோட்டை மக்கள் கூறினர்.
ஆனால் அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக அனைத்து பகுதிகளிலும் சேர்த்து 500 கோடி ரூபாய் வரை வசூல் குவிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
உரிமையாளரிடமே உதவி கேட்ட திருடன்: தர்ம அடி கொடுத்த மக்கள்!