தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
கூட்டுறவு சங்கங்களின் மூலம் தமிழக அரசு 131 அம்மா மருந்தகங்கள், 174 கூட்டுறவு மருந்தகங்கள் என மொத்தம் 305 மருந்தகங்களை நடத்தி வருகிறது. இந்த மருந்தகங்களில் ஆண்டு ஒன்றுக்கு 100 கோடி வரை வர்த்தகமாகிறது. Amma pharmacies will never close
இந்த நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலில் அறிவித்த, முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் மூடப்படும் என்று கருத்து நிலவும் நிலையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், திருச்சியில் அமைக்கப்படும் முதல்வர் மருந்தகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களுடன் பேசியவர், “முதல்வர் மருந்தகம் இந்த மாத இறுதிக்குள் துவக்கி வைக்கப்படும்.
இங்கு 186 தரமுள்ள மருந்துகள் விற்கப்படும். சித்தா, ஹோமியோபதி மருந்துகளும் விற்கப்படும். இதுவரை 300 தனி நபர்கள் லைசன்ஸ் பெற்றுள்ளார்கள். 440 கூட்டுறவு அமைப்புகள் லைசன்ஸ் பெற்றுள்ளன. மேலும், 402 பேர் லைசன்ஸ் பெற உள்ளனர். 898 கடைகள் தயார் நிலையில் உள்ளன. முதல் நாள் சென்னையில் துவக்கப்பட்டு மறுநாள் தமிழகம் முழுவதும் கடைகள் தயார் நிலையில் இருக்கும்.
கூட்டுறவுத்துறை மூலமாக இரண்டு மருந்தகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒன்று கூட்டுறவு மருந்தகம், மற்றொன்று அம்மா மருந்தகம், அது தொடர்ந்து செயல்படும். ஒரு புதிய முயற்சியாக ஜெனரிக் மருந்துகள் கிடைக்கும் வகையில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுகிறது.
இந்த மருந்தகத்திற்காக மூன்று பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சிறப்பு, பொது மருந்துகள் 10% சதவிகிதம் விலை குறைவாகக் கிடைக்கும். இதன் மூலமாக பொதுமக்களுடைய மருந்துகளுக்கான செலவு மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.