ஆம்பூர் சின்னவரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் பரிதா ஷுஸ் தோல் காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் பரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள் ஏராளமாக உள்ளன.
இந்த நிறுவனத்தில் வருமானத்தை குறைத்து காட்டி அதிக சொத்துகள் குவித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும், கொரோனா காலத்தில் ஏற்றுமதி செய்த வகையில் வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி,
வருமான வரித்துறை துணை ஆணையர் கிருஷ்ணபிரசாத் தலைமையில் 250க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பரிதா குழுமத்துக்கு சொந்தமான தொழிற்சாலைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
23ம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கிய இந்தச் சோதனை, 27ம் தேதி முடிவுக்கு வந்தது.

மொத்தத்தில், ஆம்பூரில் பரிதா குழுமத்திற்கு சொந்தமான 10 இடங்களில் இந்தச் சோதனை நடைபெற்றது.
அப்போது, முக்கிய தகவல்கள் அடங்கிய ‘பென் டிரைவ்’ மற்றும் ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றிச் சென்றனர்.
இந்த நிலையில், இன்று மாலை (செப்டம்பர் 26) ஆம்பூர் சின்னவரிகம் பகுதியில் செயல்பட்டு வரும் பரிதா ஷுஸ் தோல் காலணி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.
5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. தீயணைப்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதால் தொழிற்சாலையில் உள்ள ஒரு யூனிட் பகுதி முழுவதும் எரிந்து நாசமாகி உள்ளது.
ஜெ.பிரகாஷ்
டிஜிட்டல் திண்ணை: ஆபரேஷன் ஃபரிதா பாபு – ஆம்பூர் ரெய்டின் அரசியல், அமலாக்கப் பின்னணி!
ஆர்எஸ்எஸ் ஊர்வல நாளில் மனிதச் சங்கிலி: விசிக-கம்யூனிஸ்டு அறிவிப்பு!