‘சென்னையில் ஒரு நாள்’ பட பாணியில், மின்னல் வேகத்தில் ஆம்புலன்ஸை ஓட்டிச்சென்று பச்சிளம் குழந்தையின் உயிரை காப்பாற்றியிருக்கிறார் ஆம்புலன்ஸ் டிரைவர் ஹக்கீம்.
இந்த திக் திக் நிமிடங்கள் குறித்து மின்னம்பலத்திடன் விவரித்தார் ஹக்கீம்.
கடந்த அக்டோபர் 14, மாலை 6.55 மணியளவில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டி வரும் டிரைவர் ஹக்கீமுக்கு தொலைபேசியில் ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசியவர்கள், “கோத்தகிரி தனியார் மருத்துவமனையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பிறந்த எங்கள் பச்சிளம் குழந்தைக்கு கடும் குளிரால், மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
மேல் சிகிச்சைக்காக குழந்தையை கோவைக்கு 1 மணி நேரத்திற்குள் அழைத்து சென்றால் மட்டுமே உயிரை காப்பாற்ற முடியும்” என்று படபடப்புடன் கூறுகின்றனர்.
கோத்தகிரியிலிருந்து கோவை செல்ல 85 கி.மீ., குறைந்தது 2 மணி நேரம் ஆகும். அதிலும் மலைப் பாதையை கடக்கும் தூரம் மட்டும் 25 கி.மீ. மழை வேறு பெய்து கொண்டிருக்கிறது.
1 மணி நேரத்திற்குள் குழந்தையை கோவை மருத்துவமனைக்கு அழைத்து செல்வது சவாலான காரியம். என்ன செய்வதென்று யோசித்தார் ஆம்புலன்ஸ் டிரைவர் ஹக்கீம்.
கோவையில் உள்ள தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களுக்கு வாட்ஸப் மூலம் தகவல் தெரிவித்துவிட்டு, அன்றைய தினம் 7.00 மணிக்கு மருத்துவமனைக்கு சென்றார் ஹக்கீம்.
மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது, குழந்தையின் பெற்றோர்கள் பரிதவிப்புடனும், கண்ணீருடனும் நின்று கொண்டிருந்தனர்.
ஆம்புலன்ஸ் வந்த அடுத்த 5 நிமிடத்தில் குழந்தையின் தந்தை, சித்தப்பா, செவிலியர் என மூன்று பேரும் குழந்தையை தூக்கிக் கொண்டு வண்டியில் ஏறினர். சரியாக இரவு 7.05 மணிக்கு ஆம்புலன்ஸ் கோவை மருத்துவமனை நோக்கி புறப்பட்டது.
கடும் குளிர், மழையில், கோத்தகிரி – மேட்டுப்பாளையம் மலை பாதையில் மிகவும் கவனத்துடன் வாகனத்தை இயக்கினார் ஹக்கீம். 25 கி.மீ மலைப்பாதையை 30 நிமிடங்களில் கடந்தார்.
இதுவரை சென்றது மலைப்பாதை, போக்குவரத்து நெரிசல் பெரிதாக இல்லை. இனி நகருக்குள் பயணிக்க வேண்டும். அங்கு போக்குவரத்து நெரிசல் இருந்ததால் ஹக்கிமுக்கு ஆம்புலன்ஸை வேகமாக இயக்க சவாலாக இருந்தது.
அப்போது தான் ஹக்கிமுக்கு உதவ தென்றல், அன்சாரி, நிழல் என மூன்று ஆம்புலன்ஸ் வாகனங்கள் மேட்டுப்பாளையத்துக்கு வந்தன.
ஹக்கிம் ஓட்டி சென்ற ஆம்புலன்சிற்கு முன்பும் பின்பும் எஸ்காட் போல இந்த வாகனங்கள் பத்திரமாக காரமடை வரை அழைத்து சென்றன.
இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் ஆம்புலன்ஸ் சென்றது. மேலும், மேட்டுப்பாளையம் காவல்துறையினர் போக்குவரத்தை ஒழுங்குப்படுதினர். இப்போது மணி 7.45.
8 மணிக்குள்ளாக மருத்துவமனைக்கு சென்றுவிடலாம் என்று ஹக்கிமுக்கு நம்பிக்கை வந்தது.
காரமடையிலிருந்து கோவில்பாளையம் வரை இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் உதவி செய்ய வந்தன. கோவில்பாளையத்திலிருந்து இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் கணபதி நகரம் வரை செல்ல உதவி செய்தன.
சரியாக 8.11 மணிக்கு மாசாணி அம்மன் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் சென்றடைந்தது. அப்போது குழந்தையின் உடல்நிலை மோசமடைந்ததால், அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்க மாசாணி அம்மன் மருத்துவமனை மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
ஒரு மணி நேரத்திற்குள்ளாக அழைத்து வந்தும் குழந்தையை காப்பாற்ற முடியாமல் போய் விடுமோ என்ற கலக்கத்திலிருந்தார் ஹக்கிம்.
அருகில் இருந்த குப்புசாமி நாயுடு மருத்துவமனைக்கு 2 நிமிடங்களில் குழந்தையை அழைத்து சென்றார். நேரத்தை பார்த்தார் ஹக்கீம் மணி 8.13., குழந்தைக்கு அரை மணி நேரம் முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர். அப்போது தான் ஹக்கிமிற்கு மூச்சு வந்தது.
பச்சிளம் குழந்தையை அவசர சிகிச்சைக்காக அழைத்து செல்வது ஹக்கீமிற்கு இது தான் முதல்முறை.
தனியார் ஆம்புலன்ஸ் நண்பர்கள் உதவியதாலும், காவல்துறை உதவியதாலும் தான் என்னால் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்கு வர முடிந்தது என்று நம்மிடம் கூறிய ஹக்கிம், எல்லா புகழும் இறைவனுக்கே என்ற ஒற்றை வார்த்தையில் பச்சிளம் குழந்தையை காப்பாற்றிய நிகழ்வை சொல்லி முடித்தார்.
செல்வம்
மீண்டும் தயாரிப்பாளர் அவதாரத்தில் பூங்குழலி
உக்ரைனை அழிப்பது எங்கள் நோக்கமல்ல: புதின்