சென்னையில் அம்பேத்கர் மணிமண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கர் முழு உருவச் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சட்டமன்றத்தின் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபம் வளாகத்தில் அம்பேத்கர் முழு உருவச்சிலை நிறுவப்படும் என்று 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இதற்கான முழு செலவையும் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஏற்றுக்கொண்டு, சிலையை வடிவமைத்து தருவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறினார்.
இதனை முதலமைச்சர் ஏற்றுக்கொண்ட நிலையில், அம்பேத்கர் மணிமண்டபம் புதுப்பிக்கப்பட்டு 13 அடி உயரத்திலான முழு உருவ வெண்கலச் சிலை வடிவமைக்கப்பட்டது.
அம்பேத்கர் மணிமண்டபத்தில் நுழைவு வாயிலில் நிறுவப்பட்டுள்ள அந்த சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(அக்டோபர் 27) திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து முழு உருவ சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் முதலமைச்சர் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்ரமணியன், மேயர் பிரியா, விடுதலை சிறுத்தைக் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் அக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
கலை.ரா
தமிழக மீனவர்கள் 7 பேருக்குச் சிறை!
ஆன்லைனில் வாங்கப்பட்டதா வெடிப்பொருட்கள்? – அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களிடம் விசாரணை!