நீக்கப்பட்ட அம்பேத்கர் படங்கள்: வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்!
நீதிமன்றங்களில் திருவள்ளுவர் மற்றும் மகாத்மா காந்தி புகைப்படங்கள் மட்டுமே வைக்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற சுற்றறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று (ஜூலை 24) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளுவர் உருவப்படங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என அனைத்து நீதிமன்றங்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் சுற்றறிக்கை அனுப்பியது.
இதனை மீறி வேறு படங்களை நீதிமன்றத்தில் வைத்தால் பார்கவுன்சில் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது.
ஆனால் நீதிமன்றங்களில் அம்பேத்கரின் புகைப்படங்கள் மற்றும் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படங்கள் மற்றும் சிலையை அகற்ற வேண்டும் என்ற சுற்றறிக்கையைத் திரும்ப பெற வேண்டும் என்று தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னையில் உயர்நீதிமன்ற வாயிலின் முன்பு சுமார் 150-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
அம்பேத்கர் புகைப்படங்கள் மற்றும் சிலைகளை நீதிமன்றத்தில் வைக்கக் கூடாது என்ற சுற்றறிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வழக்கறிஞர்கள் ”சென்னை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு சுற்றறிக்கையை அனுப்பும் என்று கனவிலும் தாங்கள் எதிர்பார்க்கவில்லை. அம்பேத்கரை பற்றி தெரிந்து அனுப்பினார்களா அல்லது தெரியாமல் அனுப்பினார்களா என்ற கேள்வி எழுகிறது.
தற்போது புதிதாக வந்துள்ள தலைமை நீதிபதிக்கு தமிழகத்தை பற்றி தெரியாமல் இருக்கலாம். ஆனால் இங்கே இருக்கக்கூடிய மற்ற நீதிபதிகளுக்கு தமிழ்நாட்டை பற்றி நன்கு தெரியும்.
தமிழ்நாட்டில் பல நீதிமன்றங்களில் அம்பேத்கர் திருவுருவ படங்கள் நிறுவப்பட்டுள்ளது. ஆனால் 7.7.2023 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவால் நீதிமன்றங்களில் அவசர கோலத்தில் அம்பேத்கரின் உருவப்படங்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும் எங்கெல்லாம் அம்பேத்கரின் உருவப்படங்கள் அகற்றப்பட்டதோ அங்கெல்லாம் உடனடியாக படங்களை திரும்ப வைக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வழக்கறிஞர்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்” என்று அவர்கள் தெரிவித்தனர்.
மோனிஷா
பி.எஃப் வட்டி விகிதம் அதிகரிப்பு!
காதல் விவகாரம்… இளைஞர் வெட்டிக் கொலை: தீவிர விசாரணை!