தென்காசி ஆழ்வார்குறிச்சியில் பதியப்பட்டப்வழக்கில் அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி சென்னையில் இருந்து அரசுப் பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்டார்.
பாஜகமாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டுப் பிரிவு தலைவராகவும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் வலது கரமாகவும் இருந்து வருபவர் அமர் பிரசாத் ரெட்டி.
கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி பனையூரில் உள்ள அண்ணாமலை வீடு முன்பு நடப்பட்ட கொடிக்கம்பத்தை காவல்துறையினர் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி வாகனம் மூலம் அகற்றினர். அப்போது அங்கு திரண்டிருந்த பாஜகவினர் ஜேசிபி வாகனத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கி போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த விவகாரத்தில் அமர் பிரசாத் ரெட்டியை காவல்துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இதனிடையே கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி தென்காசி மாவட்டம் கடையம் அருகே பொட்டல்புதூரில் என் மண் என் மக்கள்; பாதயாத்திரை நடைபெற்றது.
அப்போது பாதயாத்திரையை பொட்டல் புதூரில் இருந்து தொடங்க வேண்டாம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே முதலியார்பட்டி அடுத்த சீவலப்பேரி சுடலை மாடன் கோயிலில் இருந்து கடையம் வரை நடைபயணம் செல்ல போலீசார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தடையை மீறி ‘என் மண் என் மக்கள்’ பாதயாத்திரை நடைபெற்றது.
இதனால் என் மண், என் மக்கள் பாத யாத்திரை நிகழ்ச்சியின் போது போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட பாஜகவினர் மீது செப்டம்பர் 9 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அமர் பிரசாத் ரெட்டியை இன்று விசாரணைக்கு அம்பை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சென்னை கோயம்பேட்டில் இருந்து பொதுமக்கள் பயணம் செய்யும் எஸ்சிடிசி பேருந்தில் போலீசார் நேற்று இரவு அழைத்து சென்றனர். வழக்கமாக இதுபோன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் போது போலீஸ் வாகனத்தில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து இன்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பிறகு இன்றைய தினம் மாலையே மீண்டும் அமர் பிரசாத் ரெட்டி சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
எடப்பாடி வீட்டிலும் ரெய்டு ? முதலில் வந்த உத்தரவு!
லால் சலாம் ஆடியோ லாஞ்ச்: ரஜினி பிறந்தநாள் ஸ்பெஷலா?