பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. Amar Prasad Reddy got bail
சென்னை அடுத்த பனையூரில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வீடு முன்பு 45 அடி உயர பாஜக கொடிக்கம்பம் வைக்கப்பட்டது. அதை அகற்ற சென்ற போது மாநகராட்சிக்கு சொந்தமான ஜே.சி.பி வாகன கண்ணாடியை அடித்து நொறுக்கியதாக தமிழக பாஜக நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவர்கள் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் அமர் பிரசாத் ரெட்டி, கன்னியப்பன்(37), பாலகுமார்(35), ரமேஷ் சிவா(33), பாலவினோத் குமார்(34) உள்ளிட்ட பாஜகவினர் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் அவர்களது மனுவை கடந்த நவம்பர் 4ஆம் தேதி நீதிபதி மேவிஸ் தீபிகா சுந்தரவதனா தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இதையடுத்து அமர்பிரசாத் ரெட்டி ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த 7ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது காவல்துறை தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, ஜாமீன் கோரி அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 6 பேரும் தாக்கல் செய்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு இன்று (நவம்பர் 10) விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல்துறை சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்ப ராஜ் ஆஜராகி, “அந்த இடத்தில் கொடிக்கம்பம் வைக்க ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்டது. அதனை மீறி கொடிக்கம்பம் வைத்தனர்.
இந்த விவகாரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சம்பந்தப்பட்டுள்ளதால் அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, அமர் பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது. ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது” என வாதிட்டார்.
உடைக்கப்பட்ட ஜேசிபி இயந்திரத்தின் கண்ணாடியின் மதிப்பு ரூ.50,000 எனவும் தெரிவித்தார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “இந்த வழக்கின் தற்போதைய நிலை என்ன?. அமர் பிரசாத் ரெட்டி இன்னும் எத்தனை நாட்கள் சிறையில் இருக்க வேண்டுமென நினைக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து, இரண்டு வாரங்களுக்கு கானாத்தூர் காவல் நிலையத்தில் காலை மற்றும் மாலையில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். ஜேசிபி இயந்திரம் சேதப்படுத்தப்பட்டதற்காக அதன் உரிமையாளருக்கு ஆறு பேரும் தலா 2 ஆயிரம் ரூபாய் வீதம் 12 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையின் போது, 55 அடி உயரத்தில் கொடிக்கம்பம் வைத்ததாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட, நீதிபதி, அவ்வளவு உயரத்தில் வைத்தால் எந்த கொடி என்று யாருக்கு தெரியும்? என கேள்வி எழுப்பியதால் நீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
காக்கா, குருவி உட்கார மட்டுமே கொடிக் கம்பம் பயன்படும் எனத் தெரிவித்ததோடு, மீண்டும் மாநகராட்சி இடத்தில் கொடிக் கம்பம் அமைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார். Amar Prasad Reddy got bail
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
சலார் படத்தை ரிலீஸ் செய்யும் ரெட் ஜெயண்ட்!
”மாலைக்குள் மகளிர் உரிமைத் தொகை வந்து சேரும்”: முதல்வர் ஸ்டாலின்
இது அத்தனைக்கும் ஆசைப்படு…