காவிரியிலிருந்து கர்நாடகா தண்ணீர் திறந்துவிடுமா, காவிரி ஆற்றில் நீர் பாயுமா, பாசனத்துக்கு தண்ணீர் கிடைக்குமா, பயிர்கள் எல்லாம் விளைச்சல் பெறுமா என வேதனையில் இருக்கும் டெல்டா விவசாயிகள், “எங்கள் ஊரில் காவிரிக்குப் பதில் கள்ளச்சாராயம் தான் பாய்கிறது” என வேதனையுடன் கூறுகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் கள்ளச்சாராயமும், மது பாட்டில்களும் கள்ளத்தனமாக விற்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் மக்களே நேரடியாகக் களத்தில் இறங்கி கள்ளச்சாராயம் அழிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
புதுச்சேரி பிரதேசம் காரைக்காலை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் மதுபான பாட்டில்கள் ஜரூராக விற்பனை நடப்பதாகவும்,
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மாயவரம் போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராய விற்பனை அதிகளவு நடப்பதாகவும், இதை காவல்துறை கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் டெல்டா விவசாயிகள் கூறுகின்றனர்.
“தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய நான்கு மாவட்டத்தில் சுமார் 500 வியாபாரிகள் கள்ளச்சாராயத்தை விற்பனை செய்கின்றனர்.
5000 லிட்டர் சாராயத்தில், ஒரு லிட்டருக்கு 5 லிட்டர் வீதம் தண்ணீர் கலந்து அன்றாடம் கள்ளத்தனமாக விற்பனை செய்து வருகிறார்கள்” என்று டெல்டா மாவட்டத்தில் உள்ள சில நேர்மையான போலீஸ் அதிகாரிகளே கூறுகின்றனர்.
மேலும், “கள்ளச்சாராயம் மட்டுமல்லாமல் கள்ளத்தனமாகப் புதுச்சேரி மது பாட்டில்களையும் டாஸ்மாக் கடைகளுக்குப் போட்டியாக விற்பனை செய்து வருகின்றனர்” என்கிறார்கள் டாஸ்மாக் சேல்ஸ் மேன்கள்.
“சாராய வியாபாரிகளிடமிருந்து உள்ளூர் போலீசாரும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரும் வாரம் வாரம் கணிசமாக மாமூல் பெற்றுக் கொண்டு, கள்ளச்சாராய விற்பனையை தடுப்பதில்லை” என்கிறார்கள் டெல்டா பகுதி பொதுமக்கள்.
சில நாட்களுக்கு முன்பு மயிலாடுதுறையில் பெண்கள் ஒன்று திரண்டு சாராய மூட்டைகளைக் கைப்பற்றி அழித்தனர்,
அதன் எதிரொலியாக நேற்று அக்டோபர் 9 ஆம் தேதி நாகப்பட்டினம் போலீசார், கள்ளத்தனமான கடத்தி வரப்பட்ட அயிரக்கணக்கான பாட்டில்களைப் பிடித்துள்ளனர்.
இப்படி டெல்டா மாவட்டங்களில் காவிரிக்குப் பதிலாக ஆறாக ஓடும் கள்ளச்சாராயத்தைத் தடுக்கவில்லை என்றால் வரக்கூடிய காலத்தில் பெரும் ஆபத்தை தமிழக அரசு சந்திக்கும் என்கிறார்கள் டெல்டா மாவட்ட விவசாயிகள்.
முன்னதாக விழுப்புரம் மாவட்டம் எக்கியார்குப்பம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
”நாங்கள் உங்களுடன் நிற்கிறோம்”: இஸ்ரேல் பிரதமருடன் பேசிய மோடி
இஸ்ரேல் – ஹமாஸ் போர்: இந்தியாவின் நகை வர்த்தகத்தில் கடும் பாதிப்பு!