அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் முடிவிற்கு இடைக்காலத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
தமிழகக் கோயில்களில் அர்ச்சர்கர்கள் மற்றும் பூசாரிகள் நியமனம் தொடர்பாக 2020 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத் துறை புதிய விதிகளை வெளியிட்டது.
அதன்படி ஆகம பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி பெற்ற, பதினெட்டு வயது முதல் முப்பதைந்து வயதுக்கு உட்பட்வர்களை அர்ச்சகராக நியமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆதிசைவ சிவாசார்யர்கள் சேவா சங்கம் மற்றும் சில தனிநபர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக தடை விதிக்க கேட்டு தொடரப்பட்ட இந்த வழக்கில், அரசின் விதிகள் செல்லும் என்று உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது.
அதேவேளை ஆகம விதிப்படியே அர்ச்சகர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் ஆகம விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு நியமிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தது.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனம் செய்யும் தமிழக அரசின் முடிவிற்கு இடைக்கால தடை விதிக்கக்கோரி, பா.ஜ.க மூத்த நிர்வாகி சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
இதனை விசாரித்த நீதிமன்றம் அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. தமிழ்நாட்டில் அர்ச்சகர்கள் நியமனங்களை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து இந்த வழக்கும் விசாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்த மனு மீது பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
கலை.ரா
அர்ச்சகர் நியமனம்: அரசு விதிகள் செல்லும்-உயர் நீதிமன்றம்!