4 வருடமாக நடந்த திருட்டு… ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 100 சவரன் நகைகள் மீட்பு!

சினிமா தமிழகம்

நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் நகைகளை திருடிய வழக்கில் இருவரை கைது செய்த போலீஸார், அவர்களிடமிருந்து சுமார் 100 சவரன் தங்க நகைகள், 30 கிராம் வைர நகைகள், 4 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் வீட்டுப் பத்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

நடிகர் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சென்னை தேனாம்பேட்டை செயிண்ட் மேரிஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வசித்து வருகிறார். தனது வீட்டிலுள்ள லாக்கரில் இருந்த நகைகளைக் காணவில்லை என சென்னை தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரில், 2019 ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை. சென்னை செயிண்ட் மேரிஸ் சாலை வீடு, தனுஷின் சிஐடி நகர் வீடு, போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீடு என மாறி மாறி நகைகள் லாக்கரில் வைக்கப்பட்டிருந்தது.

நான் லாக்கரின் சாவியை அலமாரியில் வைப்பேன் என்பது பணிப்பெண்களான ஈஸ்வரி, லட்சுமி, கார் ஓட்டுநர் வெங்கட் ஆகியோருக்கு தெரியும். நான் இல்லாத நேரத்தில் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளனர்.

கடந்த மாதம் 10 ஆம் தேதி லாக்கரை நான் திறந்த போது அதில் சில நகைகள் மட்டுமே இருந்தன. விலை மதிப்புமிக்க பல நகைகளை காணவில்லை. இந்த நகைகள் அனைத்தும் திருமணத்திற்கு முன்பும் பின்பும் என 18 ஆண்டுகளாக வாங்கப்பட்டவையாகும். ஒரு ஜோடி வைரம் மற்றும் பழங்கால தங்க நகைகள், நவரத்தின நகைகள், பழங்கால வைரம், ஆரம், நெக்லஸ், வளையல் என 60 பவுன் நகைகள் காணாமல் போயுள்ளன.

இது தொடர்பாக எனது வீட்டில் பணியாற்றும் 2 பணிப்பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர் மீது சந்தேகம் உள்ளது என புகாரளித்திருந்தார்.

ஐஸ்வர்யா அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக ஐஸ்வர்யா வீட்டில் பணிபுரியும் 3 நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் மந்தைவெளியை சேர்ந்த ஈஸ்வரி என்ற பணிப்பெண் ஓட்டுநர் வெங்கடேசுடன் சேர்ந்து திருடியது தெரியவந்துள்ளது.

அவர்களை கைது செய்த போலீசார், இதுவரையிலும் சுமார் 100 சவரன் தங்கம், 30 கிராம் வைர நகைகள் போன்றவற்றை மீட்டுள்ளனர்.

மேலும், கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி ஈஸ்வரி விற்பனை செய்துள்ளார். அதன் மூலம் வந்த பணத்தை அவரது கணவர் வங்கி கணக்குக்கு பரிவர்த்தனை செய்துள்ளார்.

மேலும், அண்மையில் சோழிங்கநல்லூரில் 95 லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்கியுள்ளார். இதற்காக வங்கியில் கடன் வாங்கிய ஈஸ்வரி அதனை இரண்டே வருடங்களில் கட்டி முடித்துள்ளார். 6 மாதங்களுக்கு முன்பு திடீரென வேலையை விட்டு நின்றுள்ளார் என்பதும் காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

பெண்களுக்கு மதிப்பில்லை: அதிமுகவில் இணைந்த பாஜக பெண் நிர்வாகிகள்!

‘பதான்’ முதல் ’பகாசூரன்’ வரை: ஓடிடி ரிலீஸ்!

+1
0
+1
1
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *