சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதிநவீன 6 அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங், வரும் 4 ஆம் தேதி திறக்கப்பட உள்ளநிலையில் கட்டணத்தை கேட்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் புதிதாக ஆறு அடுக்கு மல்டி லெவல் கார் பார்க்கிங் ரூபாய் 250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இந்த கார் பார்க்கிங்கில் 2,150 வாகனங்கள் ஒரே நேரத்தில் நிறுத்த முடியும். மின்சார வாகனங்களும் இங்கு நிறுத்தலாம். அதற்கு சார்ஜ் ஏற்றுவதற்கான கருவிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய கார் பார்க்கிங் சில மாதங்களுக்கு முன்பே, செயல்பாட்டுக்கு வரும் என்று இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்த நிலையில், பல்வேறு நிர்வாக காரணங்களால் காலதாமதம் ஏற்பட்டது.
இந்தநிலையில், டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை 00.01 மணியில் இருந்து புதிய கார் பார்க்கிங் செயல்பாட்டுக்கு வரும் என்று, இந்திய விமான நிலைய ஆணையம் அறிவித்துள்ளது.

இனிமேல் இந்த மல்டிலெவல் ஆறு அடுக்கு புதிய கார் பார்க்கிங்-ல் தான், உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களுக்கு வரும் அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இடையே புதிய கார் பார்க்கிங் கட்டண விகிதங்களையும் அறிவித்துள்ளனர். இது பயணிகளையும், வாகன ஓட்டிகளையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஏற்கனவே சென்னை விமான நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் முதல் 30 நிமிடங்கள் நிறுத்துவதற்கு 20 ரூபாயும், அதற்கு மேல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு 25 ரூபாயும்தான் வசூலிக்கப்பட்டது.
தற்போதைய புதிய மல்டிலெவல் கார் பார்க்கிங்-ல் இரு சக்கர வாகனங்கள் 30 நிமிடங்கள் வரை நிறுத்துவதற்கு அதே 20 ரூபாய் தான்.
ஆனால் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் 30 ரூபாய். அதை போல் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தி இருந்தால் 90 ரூபாய்.
கார்களுக்கு 30 நிமிடத்திற்கு 40 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல் புதிய கார் பார்க்கிங்-ல் 30 நிமிடங்களுக்கு 75 ரூபாய் .
ஏற்கனவே உள்ள பழைய கார் பார்க்கிங்-ல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு 100 ரூபாய்.
இனிமேல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்துவதற்கு 150 ரூபாய். மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை கார்கள் நிறுத்தி இருந்தால் 500 ரூபாய்.

வேன், டெம்போக்களுக்கு 2 மணி நேரம் வரை நிறுத்தினால் பழைய பார்க்கிங்-ல் 110 ரூபாய். ஆனால் இனிமேல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் 300 ரூபாய்.
மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால் 1,000 ரூபாய். பஸ், டிரக்குகளுக்கு பழைய கார் பார்க்கிங்-ல் இரண்டு மணி நேரம் வரை நிறுத்தினால் 110 ரூபாய்.
ஆனால் புதிய பார்க்கிங்-ல் ரூபாய் இரண்டு மணி நேரம் நிறுத்தினால் 600 ரூபாய். மேலும் 10 மணி நேரத்தில் இருந்து 24 மணி நேரம் வரை நிறுத்தினால் 2,000 ரூபாய்.
இவ்வாறு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண விகிதங்கள் வரும் ஞாயிறுக்கிழமை அதிகாலை 12 மணி ஒரு நிமிடத்தில் இருந்து அமலுக்கு வருகிறது.
கலை.ரா
பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி இல்லை: டிஜிபி சைலேந்திரபாபு திட்டவட்டம்!
எதிரிகளின் வதந்திகளை அறுத்து எறிய வேண்டும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்!