ஓசூரில் விமான நிலையம், திருச்சியில் நூலகம்: ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!

Published On:

| By indhu

ஓசூரில் பன்னாட்டு விமான நிலையமும், திருச்சியில் கலைஞர் நூலகமும் அமைக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 27) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 27) உரையாற்றினார்.

அதில், “தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பிற்கும், தொழில் வளர்ச்சிக்கும் அடித்தளம் அமைக்கப்போகும் மாபெரும் அறிவிப்பு ஒன்றையும், தமிழ்நாட்டு இளைஞர்களின் அறிவு வளர்ச்சிக்கு அடித்தளம் அமைக்கப்போகும் அறிவிப்பு ஒன்றையும் தற்போது அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் வளர்ந்து வருகிறது. அதில் மிகவும் முக்கியமானது பெருந்தொழில்கள். வளர்ச்சிமிகு தமிழ்நாடாகவும், அமைதிமிகு தமிழ்நாடாகவும் இருப்பதால், தமிழ்நாட்டை நோக்கி பல்வேறு நிறுவனங்கள் தொழில் தொடங்குவதற்கு வந்துகொண்டு இருக்கிறார்கள்.

இந்த தொழில் நிறுவனங்கள் மூலமாக, தமிழ்நாட்டின் தொழில்துறை வளர்ச்சியடைகிறது என்பது மட்டுமல்ல தமிழகத்தின் இளைய சக்தியான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.

2022ஆம் ஆண்டிற்கான ஏற்றுமதி தயார் நிலை குறியீட்டில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக முன்னேற்றம் கண்டுள்ளது. மோட்டார் வாகனங்களின் உதிரி பாகங்கள், தோல் பொருட்கள், மின்னணு பொருட்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

புத்தொழில் வளர்ச்சிக்கான மாநிலங்களின் தரவரிசையில் 2020ஆம் ஆண்டு கடைசி நிலையில் இருந்த தமிழகம் தற்போது சிறந்த செயற்பாட்டாளர் அந்தஸ்தை பெற்று முதலிடத்தில் உள்ளது.

இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தினை 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும் என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக தமிழக அரசு பல்வேறு தொழில்துறை முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

உலக முதலீட்டாளர்களை ஈர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு உயர்ந்து வருவதை இதன்மூலம் நாம் அறியலாம். அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களை பரவலாக உருவாக்கி வருகிறோம்.

ஓசூரில் விமான நிலையம்

இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தி துறையில் ஓசூர் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவில் முதலீடுகளை ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளை கொண்டு வேகமாக வளர்ந்துவரும் ஓசூர் நகரத்தினை தமிழகத்தின் முக்கியமான பொருளாதார வளர்ச்சி மையமாக உருவாக்குவதற்காக அங்கு நவீன உட்கட்டமைப்பில், பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், ஓசூர் நகரத்திற்கான ஒரு புதிய பெரும் திட்டம் தயாரிக்கப்பட்டு அது முடிவடையும் தருவாயில் உள்ளது. ஓசூர் மட்டுமல்லாது கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி பகுதியின் ஒட்டுமொத்த சமூக பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஓசூரில் ஒரு விமான நிலையம் அமைப்பது அவசியம்.

ஓசூரில் 2,000 ஏக்கர் நிலப்பரப்பில் ஆண்டுக்கு 30 மில்லியன் பயணிகளை கையாளக்கூடிய வகையில் ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும்.

திருச்சியில் நூலகம்

திமுக என்பது மாபெரும் அறிவியக்கம். அதனால்தான் திமுகவின் முதல் தலைமை நிலையத்திற்கு அறிஞர் அண்ணா அறிவகம் என்று பெயரிட்டார். தற்போதைய தலைமை நிலையத்திற்கு அறிவாலயம் என்று கலைஞர் பெயர் சூட்டினார்.

திமுக அரசியல் இயக்கமாக மட்டுமல்லாமல், தமிழ் இலக்கிய இயக்கமாகவும் வளர்ந்தது. வாசிப்பதற்கும், சுவாசிப்பதற்கும் வேறுபாடு காணமுடியாத அளவில் வாழ்ந்தவர் அறிஞர் அண்ணா.

பாதிவரை படித்த புத்தங்களின் மீதியை படிப்பதற்காக அறுவை சிகிச்சையை தள்ளிவைக்க சொன்னவர் அறிஞர் அண்ணா.

சென்னை கோட்டூர் புரத்தில் 8 மாடிகள் கொண்ட ஒரே நேரத்தில் 1,200 பேர் உக்கார்ந்து படிக்கக்கூடிய வகையில் ஒரு நூலகத்தை கட்டி அதற்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் என்று பெயரிட்டு மகிழ்ந்தவர் கலைஞர்.

அந்த வகையில், தமிழகத்தின் பிற பகுதிகளும் நூலகங்கள் மூலம் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில், மதுரையில் “கலைஞர் நூற்றாண்டு நூலகம்” அமைக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, கோவை மக்கள் மற்றும் இளந்தலைமுறையினர் பயன்பெறும் வகையில் ஒரு மாபெரும் நூலகம் மற்றும் அறிவியல் மையம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும் என்று இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.

அந்த வரிசையில் திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரில் திறக்கப்படும்.” என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

’கல்கி 2898 ஏடி’ ரிலீஸ் : உருக்கமான அறிக்கை வெளியிட்ட வைஜெயந்தி மூவீஸ்!

23 லட்சம் யூனிட் மணல் கொள்ளை: டிஜிபிக்கு ஆதாரத்துடன் அமலாக்கத்துறை கடிதம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment