ஏர் இந்தியா ஊழியர்கள் 4,500 பேர் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வந்த ஏர் இந்தியா கடந்த ஜனவரி 27-ம் தேதி டாடா குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தை முழுமையாக புனரமைக்க முடிவு செய்துள்ள டாடா குழுமம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. முதற்கட்டமாக இளைஞர்களைக் கொண்டு நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது ஏர் இந்தியா நிறுவனத்தில் 13,000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் 8,000 பேர் நிரந்தரப் பணியாளர்களாக உள்ளனர். இளைஞர்களை பணியமர்த்தும் வகையில் நிரந்தரப் பணியாளர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்தை ஜூன் மாதம் ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்தது. இதற்கான வயது வரம்பு 55-ல் இருந்து 40 ஆக குறைக்கப்பட்டுள்ளது. விருப்ப ஓய்வு பெற ஜூன் 1 முதல் ஜூலை 31-ம் தேதி வரை விண்ணப்பிப்பவர்களுக்கு கருணைத் தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த முடிவுக்கு பணியாளர்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மொத்தமாக 4,500 பணியாளர்கள் விருப்ப ஓய்வு பெற முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அடுத்த 2 ஆண்டுகளில் 4,000 பேர் அந்நிறுவனத்தில் இருந்து பணி ஓய்வு பெற உள்ளனர். இதன் மூலம், எதிர்பார்த்தது போல இளைஞர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க முடியும் என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், விமான சேவையின் தரத்தை அதிகரிக்கவும் நவீன ரக பயணிகள் விமானங்களை வாங்கி சேவையை விரிவுபடுத்தவும் ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
~அப்துல் ராபிக் பகுருதீன்