இந்திய விமானப்படை தினத்திற்கான ஒத்திகைகள் சென்னை மெரினா கடற்கரையோரம் நடைபெற்றது.
இந்திய விமானப்படை 1932 அக்டோபர் 8 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘ராயல் இந்தியன் ஏர் ஃபோர்ஸ்’ என்று பெயரிடப்பட்டிருந்த இந்திய விமானப் படைக்கு சுதந்திரத்திற்குப் பிறகு, 1950-ஆம் வருடம் தான் ‘இந்திய விமானப் படை’ என்று பெயர் மாற்றப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8ஆம் தேதி விமானப் படை தினத்தைக் கொண்டாடும் விதமாக டெல்லியில் விமான சாகச நிகழ்ச்சிகளும், இந்திய விமானப் படையினரின் அணிவகுப்பும் நடைபெறும்.
ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், விமானப் படை தினத்தை டெல்லியில் அல்லாமல் மற்ற ஊர்களில் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி 2022 ஆம் ஆண்டு சண்டிகரிலும், 2023 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேசம் மாநில தலைநகர் பிரயாக்ராஜிலும் இந்திய விமானப் படை கொண்டாட்டம் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு 92வது இந்திய விமானப் படையின் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற உள்ளது.
இதற்கான ஒத்திகை சென்னை மெரினாவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் 5 வரை இந்த ஒத்திகை தொடரும்.
இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரான இந்திய விமானப் படை கமாண்டர் பிரேம் குமார் கூறுகையில் “ அக்டோபர் 6 ஆம் தேதி காலை 11 முதல் மதியம் 2 வரை சென்னை மெரினாவில் இந்திய விமானப் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெறும். இதில் அரக்கோணம், பெங்களூரு, தஞ்சாவூர், சூலூர் மற்றும் தாம்பரம் இருந்து 72 விமானங்கள் பங்குபெறும்.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 8ஆம் தேதி, சென்னை தாம்பரம் இந்திய விமானப் படை நிலையத்தில் காலை 7.30 முதல் 11 மணி வரை ராணுவ அணிவகுப்பு நடைபெறும். இதற்கு அதிக அளவில் மக்கள் கூட்டத்தை வரவழைத்து உலக சாதனை படைக்கத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
சென்னை மெரினாவில் நடக்கும் இந்த ஒத்திகையை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளித்தனர்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
2.5 கிலோ தங்கம் கொள்ளை… இன்ஸ்டா திருடனுக்கு வலைவீச்சு!
7 மாவட்டங்களில் மழை : வானிலை எச்சரிக்கை
செப்டம்பர் மாசத்துல இத்தனை லட்சம் பேர் மெட்ரோ பயணமா?