இந்திய விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய விமானப்படை ஆரம்பித்து 92 வருடங்கள் ஆனதை முன்னிட்டு, சென்னை மெரினாவில் கடந்த 6-ஆம் தேதி வான் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர்.
இதில், 5 பேர் வெயிலின் தாக்கத்தால், உடல்நலக் குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்கள்.
இந்த நிலையில் தாம்பரம் இந்திய விமானப்படை நிலையத்தில் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று(அக்டோபர் 8) காலை 7.30 மணிக்கு, விமானப்படையின் தலைவர் அமர் ப்ரீத் சிங் தலைமையில் தொடங்கியது. ராணுவ அணிவகுப்பு இந்திய விமானப் படையின் குருப் கேப்டன் அங்கூர் மாத்தூர் வழிநடத்தினார்.
இதற்குப் பின் உரையாற்றிய விமானப்படை தலைவர் அமர் ப்ரீத் சிங் கூறுகையில் “உலகில் ஆங்காங்கே நடந்துகொண்டிருக்கும் மோதல்கள் வலுவான மற்றும் திறமையான விமானப்படையைக் கொண்டிருக்க வேண்டியதின் அவசியத்தை உணர்த்துகிறது. எனவே, தேசிய நலனுக்குச் சவால் விடும் எந்தவொரு சவாலையும் சந்திக்க இந்திய விமானப்படை தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியின் போது ராணுவ அணிவகுப்பில் பங்குபெற்ற ஒரு படைவீரர் வெயிலின் தாக்கத்தைத் தாங்க முடியாமல் மயங்கி விழுந்தார்.
அவரை ஸ்டெரச்சரில் வைத்து அங்கு இருந்து விமானப் படை வீரர்கள் அழைத்துச் சென்று முதலுதவி அளித்தனர்.
இதற்கிடையே விமானப்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள தனது எக்ஸ் தளப்பதிவில், “நமது துணிச்சலான விமானப்படை வீரர்களுக்கு விமானப்படை தின வாழ்த்துகள். நமது விமானப்படையின் தைரியம், மற்றும் தொழில்முறைக்காகப் போற்றப்படுகிறது. நமது தேசத்தைப் பாதுகாப்பதில் விமானப்படை வீரர்களின் பங்கு மிகவும் பாராட்டத்தக்கது” என்று கூறியுள்ளார்.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”கலைஞர் நூற்றாண்டு பூங்கா நுழைவுக் கட்டணம் ரொம்ப அதிகம்” : அன்புமணி
கிராமி விருதுகளுக்காக போட்டிபோடும் மலையாள படங்கள்!
ஜம்மு காஷ்மீர் தேர்தல்: இரண்டு தொகுதிகளிலும் ஓமர் அப்துல்லா முன்னிலை!