அதிமுக அலுவலக வழக்கு; காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கின் விசாரணை அறிக்கையை செப்டம்பர் 19ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டதாக அளிக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சிபிஐ அல்லது வேறு விசாரணை அமைப்புகளுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு குறித்த விசாரணையின்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டிருப்பதாக டிஜிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என சிபிசிஐடிக்கு உத்தரவிடப்பட்டு, செப்டம்பர் 19ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. ஆகையால், விசாரணையை துரிதப்படுத்தும்படி சிபிசிஐடிக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை மனுவுடன் கூடுதல் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தார் சி.வி.சண்முகம்.
இந்த கூடுதல் மனு, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இளந்திரையன் முன்பு, இன்று (செப்டம்பர் 13) விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “செப்டம்பர் 7ம் தேதி அதிமுக அலுவலகத்தில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு செய்து கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட ஆதாரங்களைச் சேகரித்திருக்கிறோம்.
அதன் அறிக்கை செப்டம்பர் 19ம் தேதி தாக்கல் செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க அறிவுறுத்திய நீதிபதி, அந்த விசாரணை அறிக்கையை செப்டம்பர் 19ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, சி.வி.சண்முகத்தின் மனுக்களை 19ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
ஜெ.பிரகாஷ்
அதிமுக அலுவலக சாவி: பன்னீரிடம் தர உச்ச நீதிமன்றம் மறுப்பு!