தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் அரசு முறைப் பயணமாக ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டுப் பணிகள் தொடர்பான ஆய்வுகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளுக்காக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமையிலான குழுவினர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.
அவரது பயணத்தின் ஒரு பகுதியாக சிங்கப்பூர் சென்றார். நேற்று சிங்கப்பூரை அடைந்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், இன்று (ஜூலை 29)) சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மையத்திலுள்ள செயற்கை நுண்ணறிவு மையத்தினைப் பார்வையிட்டார்.
அதன் விஞ்ஞானிகளான டாக்டர்.டேரியல் மற்றும் டாக்டர்.வில்லியம்ஸ் ஆகியோருடன் வேளாண்மையில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு (Artifical Intelligence) குறித்து கேட்டறிந்தார்.
இந்தக் கலந்தாய்வின் போது தமிழ் மொழியில் வேளாண்மைக்கென தனித்துவம் வாய்ந்த “சாட் ஜி.பி.டி” போன்று “அக்ரி பாட்” என்ற ஒரு செயற்கை நுண்ணறிவு இணையதளம் உருவாக்குவது குறித்து விவாதித்தார்.
இந்த செயலி மூலம் வேளாண் தொழில்நுட்பங்களையும் வேளாண்மை சார்ந்த தகவல்களையும் துரிதமாக நமது தமிழக விவசாயிகளுக்கு கொண்டு சேர்க்க இயலும். உழவர்கள் தங்களது கைப்பேசி வாயிலாக அனைத்து சந்தேகங்களையும் தீர்த்துக்கொள்ள இயலும்.
சிங்கப்பூர் நாட்டில் தமிழ் ஒரு ஆட்சி மொழியாக உள்ளதால் சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு மையம் தமிழக அரசுடன் இணைந்து இந்த செயலியை உருவாக்க இசைவு தெரிவித்துள்ளது.
மேலும், சிங்கப்பூர் நகரில் கொய்மலர்களை ஏற்றுமதி செய்யும் ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தைக்கு அமைச்சர் எம்.ஆர்.கே. சென்று பார்வையிட்டார். அங்கு வைக்கப்பட்டுள்ள ஆர்கிட்(Orkits), அந்தூரியம் (Anthurium), சாமந்தி (Chrysanthimam), ஹைட்ராஞ்சியா (Hydrangea) போன்ற பலவகையான கொய்மலர்களின் தரம் மற்றும் அவற்றை ஏற்றுமதி செய்யத் தேவையான நுணுக்கங்களைக் கேட்டறிந்தார்.
அடுத்ததாக, சிங்கப்பூர் நகரில் அமைந்துள்ள குணப்படுத்துதல் பூங்கா (Healing Garden)-ஐப் பார்வையிட்டு அங்குள்ள மருத்துவ குணம் வாய்ந்த தாவரங்களைப் பற்றிய விவரங்களைக் கேட்டறிந்தார்.
அமைச்சரோடு வேளாண்மை உழவர் நலத்துறை வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, வேளாண் பல்கலைக் கழக துணைவேந்தர் முனைவர் கீதாலட்சுமி உள்ளிட்ட உயர் அலுவலர்கள் உடன் சென்றனர்.
-வேந்தன்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி அரசின் முடிவு: வரவேற்கும் துரை வைகோ
இனி யுபிஎஸ்சி தேர்வுகளில் பயோமெட்ரிக் முறை!!!!