மூளை அறுவை சிகிச்சை முடிந்த பின்னர் இன்று (ஏப்ரல் 1) டெல்லியில் இருந்து கோவை ஈஷா மையத்துக்கு திரும்பினார் சத்குரு.
டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த மார்ச் 17ஆம் தேதி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
10 நாட்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சத்குரு, கடந்த மார்ச் 27ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
எனினும் டெல்லியிலேயே தங்கியிருந்த அவர் இன்று (ஏப்ரல் 1) கோவை திரும்பினார். இதனிடையே கோவை விமான நிலையத்தில், ஈஷா சுற்றுவட்டார கிராமங்களில் வசிக்கும் மக்கள், தன்னார்வலர்கள், பெண்கள் என ஏராளமானோர் அவரது வருகைக்காக காத்திருந்தனர்.
சத்குரு வருகை தந்ததும், கையில் தீபம் ஏற்றியவாறும், கண்ணீர் விட்டு அழுதும் அவரை வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து கார் மூலம் ஈஷா யோகா மையத்துக்கு சென்றார்.வழி நெடுகிலும் கிராம மக்களும் தன்னார்வலர்களும் சத்குருவுக்கு பூக்கள் தூவி வரவேற்பு அளித்தனர். உள்ளூர் கிராம மக்கள் ஒன்று கூடி பாரம்பரிய இசை கருவிகளை இசைத்து சத்குருவை வரவேற்றனர்.
பழங்குடி மக்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் ஈஷாவின் நுழைவு வாயிலான மலைவாசலில் ஒன்று கூடி அவர்களின் பாரம்பரிய முறையில் வரவேற்பு கொடுத்தனர்.
இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற தாணிக்கண்டி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் விஜயா கூறுகையில், ‘எங்களுடைய கிராம மக்கள் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதற்கு சத்குரு தான் காரணம். அவரால் தான் எங்களுடைய பொருளாதாரமும் உயர்ந்துள்ளது. அவர் கற்றுக்கொடுத்த யோகா மூலம் பல இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து வெளி வந்துள்ளனர். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட செய்தியை அறிந்ததும் நான் வருத்தம் அடைந்தேன். அந்த ஆபத்தில் இருந்து சத்குரு மீண்டு வந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் கூடிய விரைவில் முழு நலன் பெற வேண்டும் என்பது என்னுடைய ஆசை’ என்றார்.
இந்நிலையில் சத்குருவிற்கு கிடைத்த அளவற்ற அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி என ஈஷா மையம் தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜனாதிபதிக்கு அவமரியாதை… பெண் என்பதாலா? பழங்குடி என்பதாலா? : தலைவர்கள் கண்டனம்!
புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் அமல்!